4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் நடிகர் சத்யராஜ் மனைவி! டியூப்பில் உணவு! திவ்யாவின் அதிர்ச்சி போஸ்ட்
சென்னை: நடிகர் சத்யராஜின் மனைவி மகேஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வருவதாக அவருடைய மகள் திவ்யா சத்யராஜ் ஒரு அதிர்ச்சிகரமான பதிவை தனது இன்ஸ்டாவில் போட்டுள்ளார்.
இதுகுறித்து திவ்யா சத்யராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிங்கிள் பேரன்ட்கள் அனைவரையும் பாராட்ட வேண்டிய பதிவு இது. கடந்த 4 ஆண்டுகளாக என் அம்மா கோமாவில் இருந்து வருகிறார். அவரை வீட்டில் வைத்து பார்த்துக் கொண்டு வருகிறோம்.

அவருக்கு உணவு கூட டியூப் வழியாக செலுத்தி வருகிறோம். நாங்கள் மனதளவில் உடைந்துவிட்டோம். ஆனாலும் நம்பிக்கையுடனும் நேர்மறையான எண்ணத்துடன் மருத்துவ சிகிச்சையால் என் அம்மா குணமாவார் என காத்திருப்போம். எங்கள் அம்மா பழைய மாதிரி திரும்பவும் கிடைப்பார் என்பது எங்களுக்கு தெரியும்.
அம்மா கோமாவில் இருப்பதால் அப்பா தனியாளாக குடும்பத்தை சமாளித்து வருகிறார். அவர்தான் எனக்கு தாய்க்கு தாயாக இருக்கிறார். அது போல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவின் தாய், அதாவது என் பாட்டியும் தவறிவிட்டார்கள். இதனால் நானும் அப்பாவுக்கு தாய் போல் மாறிவிட்டேன்.
நானும் அப்பாவும் சக்திவாய்ந்த தாய்களாக மாறி ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி கொள்கிறோம் என திவ்யா சத்யராஜ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
கோவையை சேர்ந்தவர் சத்யராஜ். கோவை ஸ்லாங்கில் காமெடியில் கலக்குவார். எந்த டயலாக்கையும் அழுத்தம் திருத்தமாக சொல்வார். ரஜினி, கமல் கோலோச்சியிருந்த காலத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சத்யராஜ். இவருடன் மணிவண்ணன், கவுண்டமணி ஜோடி சேர்ந்தால் காமெடி அருவியாக கொட்டும்.
அந்த படம் முழுக்க சிரித்து சிரித்து வயிறுதான் வலிக்கும். இதனால் அவருடைய படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது சத்யராஜ் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
சிறந்த குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தார். ராஜா ராணி படத்தில் நயன்தாராவுக்கு அப்பாவாக நடித்திருந்தார். பெரியாரின் திராவிட கொள்கையில் முழு ஈடுபாட்டுடன் இருந்து வரும் சத்யராஜ், சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.
சத்யராஜுக்கு மகேஸ்வரி என்பவருடன் 1979 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு திவ்யா என்ற மகளும் சிபிராஜ் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் சிபிராஜ் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ஆனால் தனது தந்தையை போல் அவரால் சோபிக்க முடியவில்லை.
அது போல் சத்யராஜ் மகள் திவ்யா , ஊட்டச்சத்து நிபுணராவார். இவர் மகிழ்மதி என்ற ஒரு இயக்கத்தை நடத்தி அதன் மூலம் வுறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவை வழங்கி வருகிறார். ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
உலகின் மிகப் பெரிய மதிய உணவு திட்டங்களில் ஒன்றான அட்சய பாத்திரத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் நெடுந்தீவில் உள்ள இலங்கைத் தமிழர்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த செரண்டிப் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.இவர் அரசியல் கட்சியிலும் இணைய போகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவில் இணைந்து போட்டியிடுமாறு வந்த அழைப்பை தான் ஏற்கவில்லை என தெரிவித்திருந்தார். அதாவது ஒரு மதத்தை போற்றும் கட்சியில் இணைவதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் தான் தனிக்கட்சி தொடங்க போவதில்லை என்றும் ஒரு கட்சியில் இணைந்து பணியாற்றுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
எனவே தற்போது திமுகவுக்கு ஆதரவாக சத்யராஜ் இருந்த வரும் நிலையில், ஒரு வேளை திவ்யா திமுகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு தான் ஒரு கட்சியில் இணைவேன் என சொல்லியிருந்த நிலையில் இதுவரை அவர் எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்கவில்லை. எனவே 2026 தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அவரது அரசியல் வருகை இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications