சவுக்கு சங்கர் - அண்ணாமலை போன் ரெக்கார்ட்.. உடனே விசாரியுங்கள்.. கமிஷ்னர் ஆபிஸ் போன காங்கிரஸ்
சென்னை: சவுக்கு சங்கர் - பாஜக தலைவர் அண்ணாமலை இடையிலான போன் உரையாடலை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர் வீடுகளில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது குண்டாஸ் பதியப்பட்டு உள்ளது.

சென்னை மாநகர் போலீசார் இது தொடர்பான ஆவணங்களை கோவை போலீசாரிடம் வழங்கினர். சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை முதல் தேனி போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்தனர்.
அவர் வீட்டில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் யு டியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் புகார்: இந்த நிலையில்தான் சவுக்கு சங்கர் - பாஜக தலைவர் அண்ணாமலை இடையிலான போன் உரையாடலை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி சவுக்கு சங்கர். ஜெரால்ட் பெலிக்ஸ் ஆகியோர் தேசத்திற்கும் மாநிலத்திற்கும் எதிராக செயல்படுகின்றனர். அவர்களை இயக்குவதே அண்ணாமலைதான். சவுக்கு சங்கர் - பாஜக தலைவர் அண்ணாமலை இடையிலான போன் உரையாடலை விசாரிக்க வேண்டும். கடந்த ஒரு வருட ரெக்கார்டை எடுத்தாலே எல்லாமே சரியாகிவிடும்.
அண்ணாமலைதான் இவர்களை இயக்கியது என்று தெரிந்துவிடும். அப்போது அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் காண்டீபன் சார்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
குண்டாஸ்: சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட குண்டாஸ் தொடர்பாக சென்னை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிஎம்டிஏ (CMDA) அதிகாரியின் புகாரின் பேரில். சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சங்கர் (எ) சவுக்கு சங்கர். 1/48, த/பெ.ஆச்சிமுத்து, மதுரவாயல், சென்னை என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு. தற்போது கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மத்திய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப, அவர்கள் சங்கர் (எ) சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான குண்டர் தடுப்புக் காவல் அறிக்கை. கோயம்புத்தூர் சிறையில் உள்ள சங்கர் (எ) சவுக்கு சங்கர் என்பவருக்கு இன்று (12.05.2024) சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் மூலம் சார்வு செய்யப்பட்டது.
அவர் மீது சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் சங்கர் (எ) சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி வழக்கு உட்பட 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும். மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது, என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications