சவுக்கு சங்கரின் பேட்டி சர்ச்சை.. ஜாமீனுக்காக ஃபெலிக்ஸ் ஜெரால்டு வைத்த வாதம்.. அரசு எதிர்ப்பு
சென்னை: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட தனியார் யூ டியூப் சேனல் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் தருவதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் எதிரப்பு தெரிவித்திருந்தார்.
தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனியில் தங்கியிருந்த அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவு காரணமாக புழல் சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு குண்டாஸ் வழக்கிலும்,கரூர் பணமோசடி வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது. மற்ற வழக்குகளுக்காக சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே அதே சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லி அருகே தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த பெலிக்ஸ் ஜெரால்டை கடந்த மே மாதம் 10 ஆம் தேதி திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை திருச்சி அழைத்து வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஏற்கனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி T.V. தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஃபெலிக்ஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், நூறு நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளதாகவும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது வரும் ஜூலை 29ம் தேதி தெரியும்.












Click it and Unblock the Notifications