சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து.. சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு! வேறு வழக்கிலிருந்தும் விடுதலை?
சென்னை: சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.. சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது அம்மா, தொடர்ந்திருந்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
பெண் காவலர்கள் மற்றும் போலீஸ் பெண் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் க்ரைம் போலீஸார், வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்திருந்தனர்..

புகார்கள்: இதையடுத்து, அவர் மீது சென்னை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி என தமிழகம் முழுவதும் மொத்தம் 16 போலீஸ் ஸ்டேஷன்களில் இதே குற்றச்சாட்டுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. இதைத்தவிர, சவுக்கு சங்கர் மீது வேறு சில குற்றச்சாட்டுகளுக்காகவும் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்..
இதையடுத்து, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். ஆனால், இதை எதிர்த்து அவரது அம்மா கமலா, ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர்..
குண்டர் சட்டம்: மனுதாரர் தரப்பில், சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், தவறான தகவல்களின் அடிப்படையிலேயே இப்படியொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் வாதிடப்பட்டது.
ஆனால், இதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்தது.. சவுக்கு சங்கர் தொடர்ந்து இதுபோலவே அவதூறு கருத்துகளை சொல்லி வருவதாகவும், அதனை தடுக்கவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் விளக்கம் தரப்பட்டது.
தவறுதான்: அப்போது இதுகுறித்து கூறிய நீதிபதிகள், சவுக்கு சங்கரின் கருத்து கண்டனத்திற்குரியது தான்.. இதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருக்கு தண்டனை பெற்றுத்தரலாம்.. ஆனால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டது தவறு... சினிமாவில் போலீசார், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் குறித்தெல்லாம் விமர்சனம் செய்யப்படுகிறது? அப்படின்னா, அவர்கள் எல்லார் மீதுமே நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்ட தடுப்புக் காவல் சட்டத்தை தற்போது பயன்படுத்தினால் அது நம்மை ஆங்கிலேயர் ஆட்சிக்கு கொண்டு செல்லும்" என்று கூறியிருந்தனர்.
இவ்வாறாக, இந்த வழக்கின் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்... இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு, இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பளித்துள்ளனர்..
அதன்படி, சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் ஏற்று, குண்டர் சட்டத்தை ரத்து செய்துள்ளது. அதுமட்டுமல்ல, வேறு வழக்குகளில் தேவையில்லை என்றால் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சவுக்கு சங்கரின் தாய் கமலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த தீர்ப்பானது, மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications