நீதிபதிக்கு அழுத்தம் தரமுடியுமா? தண்டனை இல்லையா? நீதிபதி சாமிநாதன் VS ஹரி பரந்தாமன்
சென்னை: சவுக்கு சங்கர் வழக்கில் உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியிருந்தார். அதற்குச் சட்டப்படி தண்டனை உண்டா? அவர்களைத் தண்டிக்க முடியாதா? என்பது பற்றி விரிவாக அலசி ஆராய்ந்துள்ளார் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன்.
யூடியூபர் சவுக்கு சங்கரைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கைத் தகுதி அடிப்படையில் விசாரிக்க வேண்டாம் எனக் கூறி, இரு அதிகாரம் மிக்க நபர்கள் தன்னை அணுகியதாகவும், அதனால் தான் வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
நீதி பரிபாலனத்தில் தலையிடும் இந்தச் செயல் நீதிமன்ற அவமதிப்பு என்பதால், அந்த இரு நபர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
ஆகவே, வழக்கு குறித்துப் பரபரப்பு மேலும் அதிகரித்தது.
இந்நிலையில் அழுத்தம் தந்த அந்த 2 நபர்கள் யார்? அவர்களைப் பற்றி புகாரளிக்காதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ள ஹரிபரந்தாமன், "நீதித்துறைக்கு உயர் அதிகாரத்தில் அழுத்தம் தருவது பலநேரங்களில் நடக்கலாம். ஆனால், அதை வெளிப்படையாக ஒரு நீதிபதி வெளியே சொல்லி இருக்கிறார். அதனால் இது கவனம் பெறுவதாக அமைந்துள்ளது. அப்படி அழுத்தம் தந்ததாகச் சொன்ன நீதிபதி, சவுக்கு சங்கர் வழக்கை அடுத்த நாள் விசாரிப்பதற்காக எடுத்து வைக்கிறார்.

முதலில் 2.15 மணிக்கு விசாரிக்க உள்ளதாக வழக்கை எடுத்து வைக்கிறார். அட்வகேட் ஜென்ட்ரலை அனைத்து கோப்புகளையும் எடுத்துத் தர உத்தரவிடுகிறார். அந்தக் கோப்புகளைப் பார்வையிட்ட விட்டு, அதை மீண்டு மறுநாள் விசாரிப்பதாக ஒத்திப் போடுகிறார்.
அடுத்த நாள் விசாரணையின் போது சொல்கிறார், 'நான் இறுதி விசாரணைக்குச் செல்லப் போகிறேன். ஏனென்றால் உயர்பதவியில் உள்ளவர்கள் இதை விசாரிக்கச் சொல்லி அழுத்தம் தருகிறார்கள்' என்கிறார்.
இதில் என்னுடைய கேள்வி என்னவென்றால், அதிகாரம் மிக்க உயர்பதவியில் உள்ளார்கள் அவரைப் பார்த்துச் சொன்னால், அது நீதித்துறை பரிபாலனத்தில் குறுக்கீடு செய்யும் குற்றமாகும். அது நேரடியாக நீதிமன்ற அவமதிப்பு. இது கிரிமினல் குற்றம்.
அப்படி என்றால், நீதிபதி அந்த நபர்கள் மீது கிரிமினல் வழக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது ஒன்றுதான் உரிய நடவடிக்கை.
நீதிபதி தனக்கு அழுத்தம் தந்தவர்கள் யார்? எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள்? அல்லது எந்த அதிகாரிகள்? எப்போது வந்தார்கள்? எந்த நேரத்தில் சந்தித்தார்கள்? எங்கே வந்து சந்தித்தார்கள்? என்ன பேசினார்கள் ஆகிய அனைத்து விவரங்களையும் அவர் வெளியிட வேண்டும்.

அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எதுவும் தெரியாதவர் அல்ல அவர். இதே சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்தவர்தான் இவர். அதற்குத் தண்டனையையும் வழங்கியவர்தான் இவர். இன்னும் கூட வெளிப்படையாகச் சொன்னால், அந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது எடுத்த நடவடிக்கை தவறு என்பது எனது கருத்து.
இதைச் சொல்வதற்கான காரணம், குற்றச்சாட்டை முன்வைப்பவரே நீதிபதியாக இருக்கக் கூடாது. சவுக்கு சங்கருக்குத் தண்டனைக் கொடுக்கக் கூடாது அல்ல எனது தரப்பு வாதம்.
அவர் சொன்னார், 'சவுக்கு சங்கர் என்னைப் பற்றி அவதூறாகப் பேசினார். அது நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவதாகும். ஆகவே அது அவமதிப்பு. எனவே அந்த வழக்கை விசாரிக்கிறேன் என்று அவரே நீதிபதியாக உட்கார்ந்து விசாரிக்கக் கூடாது. வேறு ஒரு நீதிபதிதான் விசாரிக்க வேண்டும். அதுதான் நீதி பரிபாலனத்தின் அடிப்படை விதி.
அதைச் சாமிநாதன் கடைப்பிடிக்கவில்லை. அதாவது முந்தைய சவுக்கு சங்கர் வழக்கில். இந்த வழக்கில் அதேபோல் உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் அழுத்தம் என்கிறார்.
அந்த நபர்களை இவரே தண்டிக்கலாம். விசாரிக்கலாம். ஆனால், அதைச் செய்யாமல் கருத்துச் சொல்கிறார். நாளை உயர்நீதிமன்ற நீதிபதி இது குறித்து விசாரிக்கலாம். அல்லது உச்சநீதிமன்றம் விசாரிக்கலாம். அந்தளவுக்குப் போகத் தேவையில்லை. நீதிபதி சாமிநாதனுக்கே அந்த அதிகாரம் உள்ளது. அவர் அதைச் செய்யலாம்.
அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதை ஏன் செய்யவில்லை என்று காரணம் சொல்ல வேண்டும். அவர் உலகிற்கு அதைச் சொல்லவேண்டும். அவர் ஊடகத்திற்குச் சொல்ல வேண்டும். மக்களுக்குச் சொல்ல வேண்டும்?
நீதிபதியின் விசாரணையில் யாரேனும் தலையிட்டால், எப்படி அதைப் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும்? " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications