சவுக்கு சங்கர் விடுதலை.. ஜாமீனில் விடுவிக்க உயர்நீதிமன்றம் இன்று போட்ட அதிரடி உத்தரவு
சென்னை: நில அபகரிப்பு தடுப்பு பிரிவு விசாரிக்கும் வழக்கு பற்றி தவறான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் பிரபல யூடியபூர் சவுக்கு சங்கரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதின்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிரபல யூடியூபராக இருப்பவர் சவுக்கு சங்கர். இவர் யூடியூப் சேனல்களில் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதோடு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பற்றியும் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தான் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு விசாரிக்கும் ஒரு வழக்கு தொடர்பாக கடந்த டிசம்பர் 5ஆம் தேதி சவுக்கு சங்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில் கூறிய தகவல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனக்கூறி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சவுக்கு சங்கருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது காவல்துறை பற்றி அவதூறு பரப்பியதாகவும், தவறான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதோடு சவுக்கு சங்கர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். ஜனவரி 17 ம் தேதி நடந்த விசாரணையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதோடு அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்
இதுதொடர்பாக நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், 'ஜனநாயகம் என்பது முழுக்க முழுக்க கருத்துக்கள் அடங்கியது. ஒரு கருத்து ஆதாரமற்றதாக இருந்தால், அது நீண்ட காலத்திற்கு நீடிக்காது. ஒரு கருத்தை கூறியதற்காக ஒருவர் மீது வழக்கு தொடுப்பது, பாசிச அணுகுமுறையாகும். வழக்கு தொடுப்பது வேறு; கைது செய்வது வேறு என்பதை உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெரிவித்துள்ளது. காவல் துறையினர் தேவையற்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று கூறினார்.
இருப்பினும் ஜாமீன் தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிப்பு உள்பட தொழில்நுட்ப ரீதியான காரணங்களால் சவுக்கு சங்கர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வருவது தாமதம் ஆனது. இதையடுத்து இன்று ஜாமின் உத்தரவில் மாறுதல் செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி புதிய உத்தரவு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட உடன், சிறை அதிகாரிகள் மனுதாரரை விடுதலை செய்ய வேண்டும். சான்றளிக்கப்பட்ட நகலின் வருகைக்காக காத்திருக்க தேவையில்லை என்று நீதிபதி உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில், இன்று மாலை சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications