இந்தியாவின் அடுத்த டார்க்கெட் 'இந்த' கிரகம்தான்! இஸ்ரோ எடுத்த முடிவு! பின்னால் இருக்கும் ஷாக் காரணம்
சென்னை: சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்ற நிலையில், அடுத்தகட்டமாக வெள்ளி கிரகத்தை ஆராய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் 8 கோள்கள், ஏராளமான துணை கோள்கள் இருக்கும் நிலையில் இஸ்ரோ ஏன் வெள்ளி கிரகத்தை ஆய்வுக்காக தேர்ந்தெடுத்தது? என்று கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு மத்திய அரசு விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் பதிலளித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்த வெற்றி விண்வெளி ஆய்வு மீதான ஆர்வத்தை விஞ்ஞானிகள் மத்தியில் மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே அடுத்தகட்டமாக வெள்ளி கிரகத்தை ஆய்வுக்காக இஸ்ரோ தேர்ந்தெடுத்திருக்கிறது. சூரிய குடும்பத்தில் 4 தரை பரப்பு கொண்ட கிரகங்களும், 4 வாயு கிரகங்களும் இருக்கின்றன. இதில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ மங்கள்யான் செயற்கைக்கோளை அனுப்பியது. செவ்வாய் கிரகத்திற்கு பின்னர் உயிர்கள் வாழ ஓரளவு வாய்ப்பு இருக்கும் கிரகமாக, வியாழன் கிரகத்தின் துணை கோள்கள் பார்க்கப்படுகிறது.
எனவே அதை நோக்கி சர்வதேச நாடுகள் செயற்கைக்கோள்களை அனுப்பி வருகின்றன. இப்படி இருக்கையில், சம்பந்தமே இல்லாமல், உயிர்கள் வாழ கொஞ்சம் கூட வாய்ப்பே இல்லாத கிரகமான வெள்ளியை ஏன் இஸ்ரோ ஆய்வு செய்ய முன்வந்தது? என்று கேள்வி எழுந்து வருகிறது. இதற்கான விளக்கத்தை மத்திய அரசின் மூத்த விஞ்ஞானி த.வி.வெங்டேஸ்வரன் கூறியுள்ளார்.
"வெள்ளி கிரகம் ஏறத்தாழ பூமியை போலவே இருந்தாலும், அது பூமியிலிருந்து பெரிதும் வேறுபட்டிருக்கிறது. குறிப்பாக வெள்ளி கிரகம் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றுகிறது. எனவே அங்கு சூரியன் மேற்கில்தான் உதிக்கும். அதேபோல பூமி தன்னை தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது எனில், வெள்ளி கிரகம் சுமார் 200 நாட்களுக்கும் மேல் எடுத்துக்கொள்கிறது. இதனால், இது சூரியனை சுற்றி வரும் காலமும், தன்னை தானே சுற்றி வரும் காலமும் ஏறத்தாழ சமமாக இருக்கிறது.
மற்றொரு வித்தியாசமான அம்சம் என்னவெனில், நமது சூரிய குடும்பத்தில் இருக்கும் 8 கிரகங்களில், வேறு எந்த கிரகத்திலும் இல்லாத அளவுக்கு வெள்ளி கிரகத்தில் வெப்பம் இருக்கிறது. இதற்கு காரணம் வெள்ளி கோளின் வளிமண்டத்தில் இருக்கும் சல்பூரிக் அமில மேகங்கள்தான். 'பூமி வெப்பமயமாதல்' என்று நாம் சொல்லும் நிகழ்வு வெள்ளி கிரகத்தில் நடந்துக்கொண்டிருக்கிறது. எனவே வெள்ளி கிரகத்தை பற்றி அறிந்துக்கொள்வதன் மூலம் பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றம் குறித்து நாம் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவேதான் வெள்ளி நோக்கி அடுத்த ஆய்வுகளை நாம் முன்னெடுத்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
உலகம் வெப்பமயமாதல் குறித்து சர்வதேச நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. இதை தடுக்க பல்வேறு யோசனைகள் முன்மொழியப்பட்டாலும் கூட வெப்பமயமாதல் தற்போது வரை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications