வேகமாக பரவும் 'ஸ்க்ரப் டைபஸ்' தொற்று.. யாருக்கெல்லாம் பாதிப்பு? இதை செய்தால் தப்பிக்கலாம்!
சென்னை: பருவமழை காலங்களில் வைரஸ் தொற்று இயல்பான ஒன்றுதான். ஆனால் இந்த முறை பாக்டீரியா தொற்று உருவாகியுள்ளது. 'ஸ்க்ரப் டைபஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொற்று யாரை பாதிக்கும்? எப்படி தப்புவது என்பது குறித்து பார்ப்போம்.
யாரை பாதிக்கிறது?: சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் ஸ்க்ரப் டைபஸ் பரவல் உள்ளது. அதேபோன்று கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அத்தகைய பாதிப்பு காணப்படுகிறது. விவசாயிகள், புதர்மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகே வசிப்பவர்கள், மலையேற்றத்தில் ஈடுபடுவோர், கா்ப்பிணிகள், பூச்சிக் கடிக்கு உள்ளாகும் சூழலில் இருப்போருக்கு இந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எலிஸா ரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் மூலமாக இந்த நோயைக் கண்டறியலாம்.

அறிகுறிகள் என்ன?: ஸ்க்ரப் டைபஸ் என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்று. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது அவா்களுக்கு ஸ்க்ரப் டைபஸ் நோய் ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள் அதன் முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.
சிகிச்சை என்ன?: ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சலுக்குள்ளானவா்களுக்கு அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அளித்து சிகிச்சை அளிக்க வேண்டும். அதன் பின்னரும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றாலோ அல்லது இதயம், நுரையீரல், சிறுநீரகம் சாா்ந்து பாதிப்புகள் ஏற்பட்டாலோ, ரத்த நாளத்தின் வழியே திரவ மருந்துகளை செலுத்தி உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் உயர் சிகிச்சை மையங்களில் நோயாளிகளை அனுமதிக்க வேண்டும்.
இந்தியா மட்டுமல்ல: தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும் இந்த தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. அதேபோல இந்தியா மட்டுமல்லாது, தென்கிழக்கு ஆசியா, இந்தோனேசியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவின் கிராமப்புற பகுதிகளில் இந்த தொற்று பாதிப்பை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே இது உலகளாவிய தொற்றாகத்தான் பார்க்கப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் மட்டும்தான் தொற்று பாதிப்பு இருக்கிறது என்று பயப்பட வேண்டாம்.
எப்படி பரவுகிறது?: ஸ்கரப் டைபஸ் தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியா 1810ம் ஆண்டிலேயே ஜப்பானில் கண்டறியப்பட்டிருக்கிறது. 'ஓரியன்டியா சுட்சுகாமுஷி' எனப்படும் இந்த பாக்டீரியா முதலில் பூச்சிகளை தாக்குகிறது. இந்த பூச்சிகள், பேன்கள் மனிதர்களை கடிக்கும்போது தொற்று ஏற்படுகிறது. மனிதர்களை மட்டுமல்லாது எலிகள், பூனைகள், நாய்கள் மற்றும் அணில் போன்ற விலங்குகளையும் பூச்சிகள் தாக்குவதால், அவைகளுக்கும் இதே பாதிப்பு ஏற்படுகிறது.
எப்படி தடுப்பது?: இந்த தொற்றை தடுக்க நம்மிடம் தடுப்பூசி கிடையாது. எனவே நோய் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டாலே போதுமானதுதான். அதாவது வீட்டில் 'டைதில்டோலுஅமைடு' ரசாயனம் கலந்திருக்கும் பூச்சி விரட்டிகளை பயன்படுத்தவும். கொசுவத்தி சுருள், ஸ்பிரே போன்றவற்றில் இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது.
தொற்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பூச்சிகொல்லிகளை தெளிப்பதன் மூலமும் தொற்றை பரவாமல் தடுக்க முடியும். அதேபோல 'பெர்மெத்ரின்' எனப்படும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தை 0.5% என்கிற அளவில் ஆடைகள் மீதும், பூட்ஸ் உள்ளிட்டவற்றின் மீதும் தடவும்போது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
வெளியில் செல்லும்போது முழு கை சட்டையை அணிதல், குளித்துவிட்டு துவைத்த துணியை பயன்படுத்துதல் போன்றவை தொற்று பாதிப்புகளை தடுக்கும் வழிமுறைகளாகும்












Click it and Unblock the Notifications