சீமான் காரை விட்டு இறங்கமாட்டார்.. நாம் தமிழர் - போலீஸ் இடையே கடும் தள்ளுமுள்ளு.. பரபரத்த சென்னை
சென்னை: நடிகை கூறும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் இன்று இரவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கம் போலீசில் ஆஜரானார். இந்த வேளையில் சீமானை காரை விட்டு இறங்கி செல்லும்படி கூறியதற்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அந்த இடமே களேபரமானது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர் மீது நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக அவர் கூறி வருகிறார். இதுதொடர்பான வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதோடு போலீசார் விசாரணை நடத்தி 12 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நடிகையிடம் பெங்களூர் சென்று வளசரவாக்கம் போலீசார் 3 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து விசாரணைக்கு அழைப்பு விடுத்து சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர். இந்த சம்மனை தொடர்ந்து இன்று இரவு சீமான் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். முன்னதாக சீமான் ஆஜராவதையொட்டி அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். நாம் தமிழர் கட்சியினர் நிர்வாகிகள் அதிகமாக கூடினர். இதனால் பதற்றம் அதிகரித்தது. இதனால் காவல் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் இரும்பு தடுப்பு வேலிகள் மற்றும் கயிறு கட்டி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
சீமானின் கார் வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே வந்தது. அப்போது போலீசார் அவரது கார் மட்டுமின்றி உடன் வந்த ஆதரவாளர்களின் கார்களை தடுத்து நிறுத்தினர். சீமானை காரை விட்டு இறங்கி செல்லும்படி போலீசார் கூறியதாக தெரிகிறது. இதற்கு அங்கிருந்த நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சீமானை காரை விட்டு இறங்க வேண்டாம் என்று அவர்கள் கூறினர். அதோடு சீமானின் காரை காவல் நிலையத்தின் வாயில் வரை அனுமதிக்க வேண்டும். அவர் நடந்து சென்றால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறினர்.
இதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இதனால் நாம் தமிழர் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதோடு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சீமான் காரிலேயே இருந்து வேடிக்கை பார்த்தார். அதன்பிறகு ஒருவழியாக போலீசார் சீமானின் காரை மட்டும் தடுப்புகளை தாண்டி அனுமதிக்க ஒப்புக்கொண்டனர். இதையடுத்து தான் நாம் தமிழர் கட்சியினர் அமைதியாகினர். அதன்பிறகு சீமான் தனது காரில் காவல் நிலையத்தின் வாயில் அருகே சென்றார். காவல் நிலையத்தின் வாயிலில் இருந்து 100 அடி தூரத்தில் கார் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து இறங்கி சீமான் விசாரணைக்கு ஆஜரானார். இந்த சம்பவம் வளசரவாக்கம் காவல் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications