பரந்தூர் ஏர்போர்ட்! சொந்த ஊரிலேயே ஐடி கார்டுடன் நடமாடும் சூழல்! எஸ்.டி.பி.ஐ.பரபரப்பு குற்றச்சாட்டு!
பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. பரபரப்பு குற்றச்சாட்டு.
சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களைச் சுற்றி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ஊர் மக்கள் அடையாள அட்டையுடன் மட்டுமே நடமாடும் சூழல் இருப்பதாக எஸ்.டி.பி.ஐ.கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
அடக்குமுறையின் உச்சமாக அமைதியான வழியில் போராடும் மக்களை சந்திக்கக் கூட, ஜனநாயக அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக எஸ்.டி.பி.ஐ. புகார் கூறுகிறது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

பரந்தூர் விமான நிலையம்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தில் 13 கிராம மக்கள் இணைந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அறவழி ஜனநாயக போராட்டமானது கடந்த பி.11 அன்று 200 நாட்களை எட்டியுள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமைய திட்டமிட்டுள்ள பகுதிகள் பெரும்பாலும் குடியிருப்புகளும், விவசாய விளைநிலங்களும், ஏராளமான நீர்நிலைகளும் நிறைந்த பகுதிகளாகும்.

13 கிராம மக்கள்
13 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். ஆகவே, அரசு அப்பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திட்டத்தை கைவிட வேண்டும் அல்லது திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

மக்களின் கோரிக்கை
ஆனாலும், மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல், விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு, வருவாய், மேம்பாட்டு பணிகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, திட்ட வரைபடம் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. ஒருபுறம் போராடும் மக்களிடம் கோரிக்கைகள் பரிசீலிக்கடும், மக்கள் பாதிக்காதவாறு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக்கூறிவிட்டு, மறுபுறம் அதற்கு மாற்றமான முறையில் திட்டத்திற்கான பணிகளை விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மக்களின் அழைப்பின் பேரில்
இந்த திட்டத்தின் அறிவிப்பு நிலையிலேயே காவல்துறை மூலம் ஜனநாயக விரோதமான அடக்குமுறை கையாளப்பட்டு வருகிறது. அடக்குமுறையின் உச்சமாக அமைதியான வழியில் மக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்கவும், ஜனநாயக அமைப்புகள் அவர்களை சந்திக்கவும் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. மக்களின் அழைப்பின் பேரில் சென்ற எஸ்.டி.பி.ஐ. மாநில நிர்வாகிகளும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அடையாள அட்டை
விமான நிலையம் அமைய திட்டமிட்டுள்ள கிராமங்களைச் சுற்றி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ஊர் மக்கள் அடையாள அட்டையுடன் மட்டுமே நடமாடும் சூழலும், சொந்த நாட்டிலேயே முள்ளிவாய்க்கால் மக்களைப் போன்று அகதிகளாக நடமாடும் சூழலை காவல்துறை நடவடிக்கைகள் உருவாக்கியுள்ளன என ஏகனாபுரம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ள அபாயம்
பரந்தூர் விமான நிலையத்தால் பல்வேறு சூழலியல் சிக்கல்கள் ஏற்படும் என பல்வேறு தரப்பினர் அச்சம் தெரிவிக்கின்றனர். பரந்தூர் விமான நிலையக் கட்டுமானங்களால் சென்னைக்கு வெள்ள அபாயம் ஏற்படும்' என ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் சூழலியல் ஆய்வாளர்கள் உட்பட 30 பேர் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக சமீபத்தில் மாண்டஸ்' புயலின்போது பெய்த மழையால் முழுக்க வெள்ளக்காடாகக் காட்சியளித்த பரந்தூர் பகுதிகளே சாட்சியாக நின்றன.

கண்டிக்கத்தக்கது
பரந்தூர் பகுதி கிராம மக்களின் நியாயமான எதிர்ப்பையும், ஜனநாயக அமைப்புகளின் கோரிக்கையையும், சூழலியல் ஆர்வலர்களின் எச்சரிக்கையும் பொருட்படுத்தாமல் பரந்தூர் விமான நிலையத் திட்டப் பணிகளை தமிழக அரசு தொடர்ந்து முன்னெடுப்பது என்பது கண்டிக்கத்தக்கது. எட்டு வழிச்சாலை உள்ளிட்ட விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பாதிக்கும், சூழலியலை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராக எதிர்கட்சியாக இருந்த திமுக குரல் கொடுத்து மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கு நேர்மாற்றமாக, ஆளும் கட்சியான பின்னர், பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் அடக்குமுறையை கையாளுவது ஏற்புடையதல்ல.

எஸ்.டி.பி.ஐ. கட்சி
ஆகவே, 200 நாட்களாக அறவழியில் போராடிவரும் மக்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்த்து இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் வாழ்வாதாரத்தை காக்க போராடும் மக்களுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications