ஆர்.எஸ்.எஸ். பேரணியை அனுமதித்தால் தமிழகத்தின் அமைதிக்கு பேராபத்து: எஸ்டிபிஐ கடும் கண்டனம்
சென்னை: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி கொடுக்கப்பட்டால் தமிழகத்தின் அமைதிக்கு பேராபத்து ஏற்படும் என்று எஸ்.டி.பி.ஐ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்துத்துவ பயங்கரவாதி கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்ட தேசந்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான அக்.02 அன்று, தமிழகத்தில் 51 இடங்களில் பேரணி நடத்த மதவாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்து பேரணியை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரையிலும் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கொடுக்கப்பட்டதில்லை. ஆனால், அதன் பிறகு அமைந்த அதிமுக ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு கடும் எதிர்ப்புகளை மீறி அனுமதி கொடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சுமார் 51 இடங்களில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளது. அதுவும் இந்துத்துவ பயங்கரவாதி கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்ட தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளான அக்.02 அன்று அந்த பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

தடுத்து நிறுத்த வேண்டும்
மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து, மதவாதத்தை வளர்த்தெடுக்கும் ஆர்.எஸ்.எஸ். பேரணியை அனுமதிப்பது மாநிலத்தின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் பேராபத்தாகும் என்பதால், தமிழக அரசு உயர்நீதிமன்றத்தின் அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஆர்.எஸ்.எஸ். பேரணியை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நெல்லை முபாரக் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுபரிசீலனை தேவை- கி.வீரமணி
ஏற்கனவே திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவையும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி தரக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தமது அறிக்கையில், தமிழ்நாடு அரசும், ஏன் உயர்நீதிமன்றமும்கூட காந்தியார் பிறந்த நாள் என்பதை நினைவில் வைத்து, தங்கள் முடிவை மீண்டும் சீராய்வு செய்யவேண்டும். அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை அமளிக்காடாக்கத் தெரிந்தோ, தெரியாமலோ யாரும் துணை போகவேண்டாம்! மதவெறி மாய்த்த - மனிதநேயம் என்றும் தழைக்கும் மண்ணாக தமிழ்நாட்டை பாதுகாப்பது, தமிழ்நாட்டு மக்களின் முக்கிய கடமை - கட்சி உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டதாகும்! என கூறியிருந்தார்.

அப்பீல் செய்ய வேண்டும்- சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது அறிக்கையில், தப்பூசல்களை அனுமதியாது எப்போது அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கும் முடிவானது மிகத்தவறான முன்னுதாரணமாகும். மக்கள் நலனென்பது துளியுமற்று, மதவாத அரசியலையும், பிரித்தாளும் சூழ்ச்சியையும் கையிலெடுத்து, நாட்டைத் துண்டாடி அதன்மூலம் அரசியல் இலாபமீட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பேரணியை தமிழக மண்ணில் அனுமதிப்பதென்பது மத நல்லிணக்கத்துக்கும், சமூக அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் பேராபத்தாகும். ஆகவே, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தி இருந்தார்.












Click it and Unblock the Notifications