பாஜக டீலிங்.. அதிமுக கூட்டணியில் விக்கெட்.. மிகப் பெரிய தப்பு பண்ணிட்டாங்க..கொந்தளிக்கும் SDPI கரீம்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்திருக்கின்றனர் அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும்.. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த ஒரே ஒரு இஸ்லாமிய கட்சியான எஸ்டிபிஐ வெளியேறவுள்ளது. இந்நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக செய்தது மிகப் பெரிய துரோகம் எனவும், அக்கூட்டணியை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என கூறியுள்ளார் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரீம்
அதிமுக பாஜக கூட்டணி உறுதியாக இருக்கும் நிலையில் அதனை வெளிப்படையாக அறிவித்திருக்கின்றனர் பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும்.. இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ அதிருப்தி காரணமாக வெளியேற இருக்கிறது.

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை முபாரக்கின் அறிக்கையும் அதனை தான் பிரதிபலிக்கிறது. திமுக கூட்டணியில் ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இருக்கும் நிலையில் அதிமுகவில் இருந்த ஒரே இஸ்லாமிய அமைப்பான எஸ்டிபிஐ வெளியேற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக செய்தது மிகப் பெரிய துரோகம் எனவும், அக்கூட்டணியை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என கூறியுள்ளார் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரீம். இதுதொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசிய அவர்," கடந்த காலங்களில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தோம். ஆனால் பாஜகவுடன் கூட்டணி என்ற அதிமுகவின் அறிவிப்பு மக்கள் விரோதம். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை நாங்கள் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். சிறுபான்மையின மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். பாஜகவுடன் கூட்டணி என்ற அதிமுகவின் அறிவிப்பு மிகப்பெரிய துரோகம் என்று தான் சொல்ல வேண்டும். நிச்சயம் இந்த கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள்.. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" என்றார்.
முன்னதாக எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கையில்,"அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு அதிமுக எத்தனை காரணங்களைக் கூறினாலும், அவற்றை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தக் கூட்டணிக்குப் பின்னால், ஒன்றிய அரசு பல்வேறு வழிகளில் கொடுத்த அழுத்தம் மற்றும் நெருக்கடியே முக்கிய காரணம் என்பதை அரசியல் புரிந்தவர்கள் மட்டுமின்றி பாமர மக்களும் அறிவார்கள். இத்தகைய அழுத்தங்களுக்கு அடிபணிந்து, பாஜகவுடன் கூட்டணி என்கிற தமிழகத்தின் நலனைப் பறிகொடுக்கும் அதிமுகவின் முடிவை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மாநில உரிமைகளையும், மக்களின் நம்பிக்கையையும் பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உள்ளது. ஆனால், அதிமுகவின் இந்தக் கூட்டணி முடிவு, அந்தக் கடமையை மறந்து, ஒன்றிய பாஜக அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. "கூடா நட்பு கேடாய் முடியும்" என்பது பழமொழி மட்டுமல்ல, அரசியல் உண்மையும் கூட. பாஜகவுடன் கூட்டணி வைத்த பல மாநிலக் கட்சிகள் இன்றைக்கு அவை தங்கள் அரசியல் அடையாளத்தை இழந்து, மக்களின் நம்பிக்கையைத் தொலைத்து, தோல்வியின் பாதையில் நிற்கின்றன.
இந்தக் கூட்டணி மூலம், அதிமுகவும் அதே பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும், மாநில உரிமைகளுக்கு எதிராகவும் செயல்படும் பாஜகவுடன் கைகோர்ப்பது, எந்தவொரு மாநிலக் கட்சிக்கும் அழிவைத் தவிர வேறு எதையும் கொண்டுவராது.
தமிழகம் என்பது சமூகநீதி, சமத்துவம், மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு உறுதியாக நிற்கும் மண். பாஜகவின் கொள்கைகள் எப்போதும் தமிழகத்தின் கலாச்சாரத்திற்கு எதிரானவை, சமூகநீதிக்கு எதிரானவை, மாநில உரிமைகளைப் பறிக்கும் முயற்சிகளை முன்னெடுப்பவை. இத்தகைய பாஜகவை, எந்த வழியில் வந்தாலும், யார் மீது சவாரி செய்து வந்தாலும், எந்த உருவில் வந்தாலும், தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். பாஜகவை மட்டுமல்ல, அதன் கூட்டணியையும் தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications