‘மாஜி’ அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளராக பணிபுரிந்தவர் கைது.. விசாரணையில் வெளிவந்த பரபர தகவல்கள்!
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் உதவியாளராக இருந்த, அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தலைமைச் செயலக ஊழியர் ரவி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.
மத்திய குற்றப் பிரிவு போலீசார், தலைமைச் செயலக ஊழியர் ரவி, மற்றும் தரகராகச் செயல்பட்ட ஓட்டுநர் விஜய் ஆகியோரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பணியிட மாற்றம் பெற்றுத் தருவதாகவும், மருத்துவக் கல்லூரி சீட் வாங்கித் தருவதாகவும் பலரிடமும் ரவி மோசடியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பரபர புகார்
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஹனிபா என்ற தரகர் ஆசைவார்த்தை கூறினார். தரகர் ஹனிபா மற்றும் ஓட்டுநர் விஜய் ஆகிய இருவர் மூலம் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர் ரவி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. ரவி, அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி தன்னிடம் ரூ. 11 லட்சம் பணம் வாங்கிக்கொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.

எந்த டிபார்ட்மெண்ட்ல வேணாலும்
தலைமைச் செயலக ஊழியர் ரவி, தனக்கு பல துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களைத் தெரியும் என்பதால் எந்த துறையில் வேண்டுமானாலும் வேலை வாங்கித் தருவதாக கூறினார் என்றும், ஆனால், ரூ. 11 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு அரசுப் பணி பெற்றுத் தராமல் மோசடி செய்துவிட்டதாகவும், பணத்தை திருப்பிக் கேட்டதற்கு மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்துள்ளார் முத்துலட்சுமி.

மோசடி செய்த ஊழியர்
இந்த புகாரின் பேரில் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலை மோசடி தடுப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. முத்துலட்சுமி பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் ஏஎஸ்ஓவாக பணிபுரிந்து வந்த ரவி, பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தது உறுதியானது.

அதிரடி கைது
இதையடுத்து தலைமைச் செயலக அலுவலர் ரவி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலக ஊழியர் ரவியை மத்திய குற்றப் பிரிவுபோலீசார் கைது சிறையில் அடைத்தனர். மேலும், தரகராக செயல்பட்ட விஜய் என்பவரையும் கைது செய்துள்ளனர். இதேபோல், பணியிட மாற்றம் பெற்றுத் தருவதாகவும், மருத்துவக் கல்லூரி சீட் வாங்கித் தருவதாகவும் பலரிடமும் ரவி மோசடியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மாஜி அமைச்சரின் உதவியாளர்
கைது செய்யப்பட்ட ரவி, அதிமுக ஆட்சியில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கருக்கு உதவியாளராகப் பணியாற்றியவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரவி, இதுவரை எத்தனை பேரிடம் வேலை வாங்கித் தருவதாக, டிரான்ஸ்பர் வாங்கித் தருவதாக மோசடி செய்துள்ளார் என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications