தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்? ஸ்டாலின் குட்புக்கில் வந்த பெண் அதிகாரி.. லத்திகா சரண் 2.0?
சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த காவல்துறைத் தலைவர் (டிஜிபி) யார் என்பது குறித்த முக்கிய முடிவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் அடுத்த மாதம் ஓய்வுபெற உள்ள நிலையில், சீமா அகர்வால் இந்தப் பதவிக்கான போட்டியில் தற்போது முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால், 1990 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி. முதுகலைப் பொறியியல் பட்டம் பெற்ற இவர், செய்ல் மற்றும் பெல் போன்ற நிறுவனங்களில் பொறியாளராகப் பணியாற்றினார். சேலம், மதுரை காவல் கண்காணிப்பாளர், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநர், திருச்சி காவல் ஆணையர், உளவுப் பிரிவு டிஐஜி/ஐஜி, சிறப்பு அதிரடிப் படை ஏடிஜிபி என முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். வரவிருக்கும் தேர்தலையொட்டி பணி நீட்டிப்பை அவர் எதிர்பார்த்த நிலையில், அரசு புதியவரை நியமிப்பதில் உறுதியாக உள்ளது.

தமிழ்நாட்டின் அடுத்த காவல்துறைத் தலைவர் (டிஜிபி)
முதல்வர் ஸ்டாலின் அடுத்த டிஜிபியை தேர்வு செய்யும் பணிகளைத் தொடங்கிவிட்டார். தமிழக அரசின் பரிந்துரைப் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்யும். இதில் தமிழக உள்துறை அதிகாரிகள், தற்போதைய டிஜிபியுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டு, தகுதியானோர் பட்டியல் வடிகட்டப்பட்டு மீண்டும் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தப் பட்டியலில் இருந்து அவர் ஒருவரைத் தேர்வு செய்வார். சென்னை, டெல்லியில் விரிவான ஆலோசனைகள் நடந்துள்ளன; சங்கர் ஜிவால் சில பெயர்களைப் பரிந்துரைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபி
அபய்குமார் சிங், வன்னி பெருமாள், சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ் குமார், சீமா அகர்வால், வினித் தேவ் வான்கடே, மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன் ஆகிய எட்டு ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் ஆரம்ப பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இதில், சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ் குமார், சீமா அகர்வால் ஆகிய மூவரின் பெயர்கள் மத்திய அரசால் தமிழக முதல்வருக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.
அபய்குமார் சிங் டிஜிபி
முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையரான சந்தீப் ராய் ரத்தோர், 1992 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்தவர். இவர் டிஜிபி ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. 1998 ஆம் ஆண்டில் கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளைப் பிடிப்பதில் முக்கியப் பங்காற்றினார். அண்மையில் சென்னை காவல் ஆணையர் பதவியிலிருந்து தமிழ்நாடு காவலர் பயிற்சி அகாடமிக்கு மாற்றப்பட்டார்.
சீமா அகர்வால் டிஜிபி
சந்தீப் ராய் ரத்தோர் மீது பணித்திறன் குறித்த சில புகார்கள் எழுந்த நிலையில், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் அபய்குமார் சிங் அல்லது சீமா அகர்வலை அடுத்த டிஜிபியாக நியமிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, சீமா அகர்வால் இந்தப் பட்டியலில் தற்போது முன்னிலையில் இருக்கிறார். இது லத்திகா சரணுக்குப் பிறகு, மீண்டும் தமிழ்நாட்டிற்கு ஒரு பெண் டிஜிபி வர வழிவகுக்கலாம்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அடுத்த ஓராண்டு தமிழக அரசுக்கு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இக்காலகட்டத்தில் ஆளும் கட்சிக்கு நம்பிக்கையான ஒருவர் டிஜிபி பொறுப்பில் இருப்பது கட்டாயம். தேர்தல் பணிகளுடன் சட்டம் ஒழுங்கை திறம்பட நிர்வகிப்பது பெரிய சவாலாகும். அதனாலேயே முதலமைச்சர் ஸ்டாலின் இப்பதவிக்கு உகந்தவரைத் தேர்வு செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications