நடிகைக்கு பணம் கொடுக்கப்பட்டதா? கயல்விழி அப்படி சொன்ன கொஞ்ச நேரத்துலயே சீமான் சொன்ன முரண்பாடான பதில்
சென்னை: நடிகைக்கு ரூபாய் 2 கோடி கொடுக்க பேரம் நடந்ததாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, சீமான் 2 - 3 மாதங்கள் பணம் கொடுத்ததாகக் கூறினார். அதேசமயம் அவரது மனைவி கயல்விழி, பத்திரிகையாளர் சந்திப்பின்போது முரண்பாடான பதிலை அளித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி பாலியல் புகாரில் விசாரணைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஆஜராகாததால், அவரது வீட்டு முன்பு போலீசார் நேற்று மீண்டும் சம்மன் ஒட்டினர். அதை சீமான் உதவியாளர் கிழித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சம்மனை கிழித்ததற்காக விசாரணை நடத்த வந்த இன்ஸ்பெக்டரை காவலாளி தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, காவலாளி மற்றும் சீமான் உதவியாளரை போலீசார் இழுத்து வந்து காரில் ஏற்றி கொண்டு சென்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவும் செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே சம்மனை இங்கே ஒட்டிச் செல்லவும் என்று சீமான் வீட்டுக்கு வெளியே பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீமான் வீட்டில் நடந்தது என்ன என்று அவரது மனைவி கயல்விழி விளக்கம் அளித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் கயல்விழி பேசுகையில், "நேற்று போலீசார் வருவதாக கூறியிருந்தார்கள். போலீசார் வந்தால் சம்மனை கையெழுத்திட்டு வாங்கலாம் என்றிருந்தேன். என்னிடம் பேசாமல் சம்மனை எப்படி ஒட்டிச் செல்லலாம்? போலீசார் ஒட்டிச் சென்ற சம்மனை நான்தான் கிழிக்கச் சொன்னேன். படிப்பதற்காக கிழித்து வரச் சொன்னேன். முடிந்தால் என்னை கைது செய்யட்டும். வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் மீது எந்த தவறும் இல்லை, போலீசார் திட்டமிட்டே கைது செய்துள்ளனர்.
அந்தம்மா எத்தனை நாளா பேசிட்டு இருக்கு? அவரை அசிங்கப்படுத்தத்தானே பாலியல் குற்றம், பாலியல் குற்றம்னு போடுறீங்க. அவருக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்க என்ன மரியாதை கொடுக்குறீங்க? பாலியல் வழக்கின் விசாரணையை விரைவு செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது. அதற்காக அடுத்த நாளே வீட்டுக்கு வருவீர்களா? நடிகை வழக்கில் ஏற்கனவே மூன்றரை மணி நேரம் விசாரணைக்கு ஒத்துழைத்தார் சீமான். எங்களை மனரீதியாக துன்புறுத்த காவல்துறை திட்டமிட்டு இதனை செய்துள்ளது" என்றார்.
நடிகைக்கு ரூபாய் 2 கோடி கொடுக்க பேரம் நடந்ததாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதில் அளித்த கயல்விழி, "யார்கிட்ட இருக்கு 2 கோடி. அப்படி அவரிடம் பணம் கொடுக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லையே.. அது பொய்" எனத் தெரிவித்தார்
அதேசமயம், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தருமபுரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய சீமான், "ஒரு நடிகை, ஒரு பெண் சொன்னாலே அது குற்றம் ஆகிவிடுமா? புகார் கூறிவிட்டாலே குற்றவாளி என முத்திரை குத்திவிடுவதா? எனக்கு திருமணம் ஆகும்போது அதை அந்த நடிகை நிறுத்தி இருக்கலாம். எனக்கும் அவருக்கும் திருமணமாகியிருக்கிறது என்றால் அதற்கு ஆதாரம் எங்கே?

நானே தெருக்கோடியில் நின்றுகொண்டு இருக்கிறேன். இதில் நடிகைக்கு கொடுக்க என்கிட்ட எங்கே 2 கோடி ரூபாய் இருக்கு? ஒரு முறை வாழ்வதற்கு வழியில்லை, நான் இறந்துவிடுவேன், எனக்கு உதவி செய்ங்கன்னு ஒரு ஆடியோவை நடிகை 15 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பியிருந்தார். அது கூட எனக்கு அனுப்பவில்லை.
என் வீட்டில் வேலை செய்த ஒருவர் மூலமாக உதவி கேட்டார். சரி உதவி பண்ணுங்க என்று சொன்னேன். அதனால்தான் மாதம் ரூ 50 ஆயிரம் என 2- 3 மாதங்களுக்கு கொடுத்திருப்பார்கள். அந்த ஆடியோவை நீங்கள் கேட்டால் உங்களுக்கும் உதவ வேண்டும் என தோன்றும். அந்த அளவுக்கு அவர் அழுதபடியே பேசினார். உதவி என கேட்டால் கொடுத்து தொலைக்க வேண்டியதுதான். மற்றபடி அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை" என சீமான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications