எதுக்கு நீட் தேர்வு? அய்யா மோடிக்கு உடம்பு முடியலைன்னா எந்த மருத்துவர்கிட்ட பார்ப்பாரு.. சீமான்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால் எந்த மருத்துவரிடம் போய் மருத்துவம் பார்ப்பார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை இந்த நீட் தேர்வு தமிழகத்தினுள் நுழைய விடவில்லை.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் இந்த நீட் தேர்வு நுழைந்தது, நீட் தேர்வை எதிர்த்து சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன. நீட் தேர்வை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

நீட் தேர்வு
நீட் தேர்வு கூடத்திற்கு வரும் மாணவ, மாணவிகளுக்கான கெடுபிடிகளை கண்டிக்கப்பட்டன. ஆனாலும் மத்திய அரசு எதற்கும் அசையவில்லை. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. இதன் எதிரொலியாக சட்டசபையில் நீட் விலக்கு தீர்மானத்தை நிறைவேற்றியது.

மசோதா
இது குறித்த மசோதா பெரும் போராட்டத்திற்கு பிறகு ஆளுநரிடம் இருந்து குடியரசுத் தலைவர் பார்வைக்கு அனுப்பப்பட்டதாக தெரிகிறது. நீட் தேர்வு மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் சீட்டுகள் கிடைப்பதாக சொல்லப்பட்டாலும் முன்பு இருந்தபடியே பிளஸ் 2 மதிப்பெண்ணை வைத்தே மருத்துவ படிப்புக்கு சேர்க்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நாம் தமிழர் கட்சி
இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் என்னாங்க பெரிய நீட் தேர்வு? சட்டீஸ்கரில் 35 லட்சத்திற்கு கேள்வித்தாளையே விற்கிறார்கள். வடமாநிலங்களில் நீட் தேர்வை காப்பியடித்து எழுதுகிறார்கள். அந்த தேர்வுக்கு வரும் மேற்பார்வையாளரும் கதவு கிட்டயே நின்று கொண்டு யாராவது வருகிறார்களா என பார்க்கிறார்.

தரமான மருத்துவரா
எதுக்கு நீட் தேர்வு? தகுதியான மருத்துவரை உருவாக்குவோம்னு சொல்றாங்க. சரி! இதுக்கு முன்னாடி இருந்த தேர்வு முறையில் தகுதியான மருத்துவரே உருவாகவில்லையா?, இப்ப அய்யா மோடிக்கு உடம்பு சரியில்லை. எந்த மருத்துவர்கிட்ட பார்ப்பாருனு சொல்லுங்க. ஏற்கெனவே இருந்த மருத்துவர் கிட்ட தானே, அப்போ அவர் தரமில்லையா? இந்தியாவில் தரமான மருத்துவர்களை உருவாக்க அமெரிக்காவில் உள்ள புரோமெட்ரிக் என்ற நிறுவனத்திற்கு என்ன அவசியம், அந்த நிறுவனத்திற்கு ஏன் மத்திய அரசு ஒப்பந்தம் கொடுக்கிறது. என்ன நேர்த்திக் கடனா, எல்லாம் சுத்த பைத்தியகாரத்தனம் என சீமான் பொறிந்து தள்ளியுள்ளார்.












Click it and Unblock the Notifications