குறைதீர் பெட்டி வச்சீங்களே.. என்னாச்சு.. சாவி தொலைஞ்சுடுச்சா.. இல்ல பெட்டியே காணோமா?.. சீமான்
சென்னை: மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாக பெற்ற அப்பெட்டிகள் எங்கே என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்னர் திமுக சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் பொதுமக்களின் குறைகளை தீர்க்க ஒரு பெட்டி வைக்கப்பட்டது.
இந்த பெட்டியில் போடப்படும் மனுக்கள் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தீர்வு காணப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் திமுக அரசு ஆட்சி அமைத்ததும் குறைகளை தீர்ப்பதற்கு என்றே தனிப்பிரிவை ஏற்படுத்தினார்.

ஐஏஎஸ் அதிகாரி
இதற்கு ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகரனை நியமித்திருந்தார். கடந்த மே 18 ஆம் தேதி நிலவரப்படி, 72 மரப்பெட்டிகள், 275 அட்டை பெட்டிகளில் 4 லட்சம் மனுக்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன. ஒவ்வொரு மனுவும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அடையாள எண் வழங்கப்பட்டிருந்தது.

100 நாட்கள்
இந்த நிலையில் பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்பட்டது குறித்து எந்த அறிவிப்பும் திமுக அரசு சார்பில் அண்மைக்காலமாக வரவில்லை. இதுகுறித்து சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் திமுக தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள்.

காலக்கெடு
50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது. என்னவானது தமிழகத்தின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே!

கடிதம்
மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications