அதென்ன 'தமிழிலும்' குடமுழுக்கு? அவமானம்! திருச்செந்தூர் கோபுர கலசத்தில் அன்னைத் தமிழ்! சீமான் உறுதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓதுவார்களை ஓரமாக நிற்க வைத்து முற்றோதல் செய்து ஏமாற்றும் திமுக அரசின் வெற்று அறிவிப்பை ஏற்க முடியாது எனவும், திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டில் அன்னைத்தமிழ் கோபுர கலசம் ஏற வேண்டும், மொழி என்பது நம் இனத்தின் உயிர் உரிமை; அதைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் மகனின் பிறப்புரிமை எனநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமானுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியும் - தெய்வத்தமிழ் பேரவையும் இணைந்து திருச்செந்தூரில் அறப்போராட்டம் முன்னெடுத்தோம்.

பொதுக்கூட்டத்தினால் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியின் விளைவாக , தற்போது திருச்செந்தூர் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக தமிழ்த்திருமுறைகள் முற்றோதல் நடைபெறும் என்றும், அதுதான் தமிழ் குடமுழுக்கு என்றும் ஏமாற்றும் வெற்று அறிவிப்பினை திமுக அரசு வெளியிட்டிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

seeman tn govt Tiruchendur

மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 'தமிழிலும்' குடமுழுக்கு நடத்தப்படும் என்று கூறுவது வெட்கக்கேடானது. குடமுழுக்கு முழுமையாக தமிழில் நடத்தப்பட வேண்டும். தாய்த்தமிழில் குடமுழுக்கு என்பது திமுக அரசு வேண்டா வெறுப்பாக இடும் பிச்சையோ, சலுகையோ அல்ல; திருச்செந்தூர் ஒன்றும் ஆந்திராவிலோ, கர்நாடாகவிலோ, கேரளாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ இல்லை. நாங்கள் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலிலோ, சபரிமலை ஐயப்பன் கோவிலிலோ, மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலிலோ தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று கேட்கவில்லை.

தமிழ்நாட்டில், தமிழ் முன்னோர்கள் கட்டிய தமிழர் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமான் திருக்கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பது மானத்தமிழினத்தின் வழிபாட்டு உரிமை. அதனை வழங்குவதில் அமைச்சருக்கு ஏன் இத்தனை சலிப்பு? இத்தனை வெறுப்பு? திமுக அரசு யாரும் கேட்காமல் முழுமையாக தமிழில் குடமுழுக்கு நடத்தும் என்றால் அதனை அறிவிப்பதில் இன்னும் ஏன் தாமதம்? நாங்கள் போராட்டம் நடத்தும்வரை அமைச்சர் சேகர்பாபு வாய் திறவாதாதது ஏன்?

திருச்செந்தூர் திருமுருகப்பெருமான் கோபுர கலசங்கள் நன்னீராட்டப்படும் போதும், வேள்விச்சாலையிலும் தமிழ் மந்திரங்கள் ஓதி தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் அறிஞர்கள், மெய்யன்பர்கள் மற்றும் தமிழ் மக்களின் கோரிக்கையும், விருப்பமுமாகும். குறைந்தபட்சம் சம்ஸ்கிருத்திற்கு இணையாக சரிபாதி வேள்விச்சாலைகள் அன்னைத்தமிழுக்கு வழங்கப்பட வேண்டும். கோபுர கலசங்கள் நன்னீராட்டின்போது கோபுர உச்சியிலும் தமிழ் மந்திரங்கள் ஒலிக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாகும்.

அதனை விடுத்து, தமிழ் ஓதுவார்களை ஓரமாக நிற்க வைத்து முற்றோதல் செய்துவிட்டு, அதனை தமிழில் குடமுழுக்கு நடத்தியதாக ஏமாற்றும் திமுக அரசின் வழக்கமான ஏமாற்று அறிவிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது.

தமிழ்நாடு அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோயில்களிலும் அன்னைத்தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பது உயர்நீதிமன்றமே தம்முடைய தீர்ப்பின் மூலம் உறுதி செய்துவிட்டது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் திமுக அரசிற்கு ஏன் இத்தனை தயக்கம்? ஏன் இத்தனை நடுக்கம்? தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று உதட்டளவில் உச்சரித்து தமிழரை ஏய்த்து கிடைத்த அதிகாரத்தை வைத்து பிழைக்கும் திமுக அரசு, தமிழர் உரிமையை காவு கொடுக்கும் இழிசெயலை எப்போது கைவிடப்போகிறது?

சமஸ்கிருத வேத மந்திரங்கள் ஓதி, ஆரிய வழிப்பாட்டு முறையில் கடைபிடிப்பதில் திமுக அரசிற்கு ஏன் இத்தனை ஆர்வம்? வடமொழி வழிபாட்டைக் கடைபிடிப்பதுதான் திராவிட மாடலா? இதுதான் தமிழ் மொழியை, தமிழ் பண்பாட்டை, தமிழர் உரிமையை திமுக அரசு காக்கும் முறையா?

2500 ஆண்டுகளுக்கு முன் கீழடியில் தமிழர் பண்பாட்டுத் தொன்மங்கள் கிடைத்துள்ளது பெருமை என்பதை ஏற்கும் திமுக அரசு, தமிழர் நிலத்தில் தமிழ்க் கடவுளுக்கு வடமொழியில் வழிபாடு நடந்துள்ளது என்பதை இன்னும் 1000 ஆண்டுகளுக்கு பின்வரும் தலைமுறை அறிந்தால் அது தமிழ் இனத்திற்கு அவமானமா? வெகுமானமா? தமிழர் வரலாற்று பெருமைக்கு அது மாபெரும் இழுக்கில்லையா? அதனை திமுக அரசு உணர மறுத்து வடமொழிக்கு வால் பிடிப்பதேன்?

ஆகவே, தாய்த்தமிழ் கோபுர கலசம் ஏற வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான கோரிக்கை! அதனை நிறைவேற்றும் வகையில், தமிழ் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமானுக்கு குடமுழுக்கு நன்னீராட்டின் போதும், வேள்விச்சாலையிலும் தமிழ் மந்திரங்கள் ஓதி தமிழில் குடமுழுக்கு நடந்திட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையென்றால் திட்டமிட்டபடி நாம் தமிழர் கட்சி அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+