அருணனும் சொல்லிட்டாரு! வரலாறு தெரியாத தற்குறிகளுக்குதான் அவர் மண்! சீமானை போட்டு தாக்கிய பேராசிரியர்
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வரும்நிலையில், பேராசிரியர் அருணன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அருணன் பதிவிட்டிருக்கும் பதிவானது, சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியாரை விமர்சித்து வருகிறார்.. சமூக நீதிக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்? பெண்ணுரிமைக்காக அவர் என்ன செய்தார்? பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? பெரியார் பேசினார் என்றால் பரவாயில்லை. பெரியார்தான் எல்லாம் செய்தார் என்று சொன்னால் அது எப்படி? அம்பேத்கர், பெரியாரை ஒன்றாக வைப்பது, ஒப்பிடுவது எப்படி சரியாகும்?

தாய்மொழி தமிழை சனியன், காட்டுமிராண்டி மொழி என சொன்னவர் பெரியார். திருக்குறளை மலம் என்று சொன்னவர் பெரியார். உடல் இச்சைக்கு தாய், மகள், உடன் பிறந்தவளோடு உறவு வைத்து கொள்ள சொன்னவர் பெரியார்" என்றெல்லாம் காட்டமான விமர்சனங்களை பெரியார் மீது சீமான் முன்வைத்தார்.
கண்டனங்கள்: இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.. ஆனாலும், அடுத்தடுத்த செய்தியாளர் சந்திப்புகளில் மீண்டும் பெரியாரை தாக்கி பேசி வருகிறார்? என்று மறுபடியும் விமர்சித்தார். நேற்றுகூட புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது பெரியாரை சீண்டியே பேசியிருந்தார்.
"எதுக்கெடுத்தாலும் பெரியார் மண்.. பெரியார் மண் என்று சொல்கிறார்கள்.. ஆனால், பெரியாரே ஒரு மண்தான். பெரியார் தான் சோறு ஊட்டிவிட்டார் என்று சொல்கிறார்கள். அப்போ முன்னோர்கள் எல்லாம் சும்மாக இருந்தார்களா?
சீர்திருத்தங்கள்: பெண்களை கட்டி வைத்து அவர்கள் சாட்டயாலேயே அடித்தார்களா? பெரியார் தான் சீர்திருத்தம் பெரியார் தான் எல்லாமே என்று பேசிவிட்டு இருக்கக்கூடாது. பெரியார் மண் என்று பேசாதீர்கள், இது சேர, சோழ, பாண்டியன் மண்.. இது என் மண், தமிழ் மண், எங்களுக்கு பெரியார் இது மண் அல்ல. பெரியாரே ஒரு மண்ணுதான்.. இது சேர,சோழ, பாண்டிய மண், முத்துராமலிங்க தேவரின் மண், தீரன் சின்னமலையின் மண்" என ஆவேசமாக தெரிவித்தார்.
பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மீண்டும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி, வைரமுத்து, அமீர் போன்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அரசியல், சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது..
அரைவேக்காடுகள்: இந்நிலையில், சீமானின் இக்கருத்துக்கு பேராசிரியர் அருணன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிவில், "இது பெரியார் மண் அல்ல, மூவேந்தர் மண் என்கிறார் ஒருவர். பல்லவர்-சோழர் காலத்தில்தான் பிராமணிய-சமஸ்கிருத ஆதிக்கம் வந்தது. தமிழருக்கும் தமிழுக்கும் பெரும் கேடு சூழ்ந்தது. அதை எதிர்த்து வலுவான களம் அமைத்தவர் பெரியாரே. வரலாறு தெரியாத அரைவேக்காடுகளின் வாய்ச்சவடாலில் ஏமாற வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றை இங்கு நாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது.. அப்போது அருணனும், சீமானும் நேருக்கு நேர் கருத்துக்களால் மோதிக் கொண்டார்கள்.. "கம்யூனிஸ்ட் கட்சியை விட தான் ஒரு வாக்கு குறைந்து எடுத்தாலும், நான் அந்தக்கட்சியில் சேர்ந்துவிடுகிறேன், கம்யூனிஸ்ட் கட்சியில் கொள்கை இல்லை" என்று சீமான் கூறியிருந்தார்.
சீமான் ஆவேசம்: அதற்கு பதிலடியாக பேசிய அருணன் "மார்க்ஸியம் பேசிவிட்டு இனவெறிக் கருத்து பேசினீர்கள்.. நேற்றுவரை பெரியாரை கும்பிட்டுவிட்டு இன்று பெரியாரையே வசைபாடுகிறீர்கள். உங்களிடம் என்ன கொள்கை இருக்கிறது" என சீமானை குறிப்பிட்டார்.
இந்த விவாதம் முற்றிய நிலையில் திடீரென ஆவேசமான சீமான், "ஏய் என்னய்யா லூசு மாதிரி பேசுற" என நேரலையிலேயே சத்தம்போட பதிலுக்கு "நீதான்டா லூசு, யாரைப்பார்த்து லூசு ங்கிற" என பதிலுக்கு அருணன் எகிற, நேரலையில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சியடைய, இதைப்பார்த்து தமிழக மக்கள் விக்கித்து போனது அனைவருக்கும் நினைவிருக்கலாம்..












Click it and Unblock the Notifications