அருந்ததியினரை புறக்கணிக்கும் சீமான்..ஏற்காடு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 200 பேர் கூண்டோடு விலகல்!
சென்னை: நாம் தமிழர் கட்சியில் அருந்ததியினர் புறக்கணிக்கப்படுவதால் அக்கட்சியில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் விலகுவதாக ஏற்காடு சட்டசபை தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியில் கொள்கை கோட்பாடு என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. ஆதித்தமிழர் விடுதலை இல்லாது மீதித்தமிழர் வெல்லாது என்கிற கோட்பாட்டை பெயரளவிற்கு மட்டுமே மேடையில் பேசுகிறீர்கள் எனவும் ஏற்காடு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது தொடர்பாக ஏற்காடு சட்டசபை தொகுதி செய்தி தொடர்பாளர் மு.சதிஸ்குமார் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஏற்காடு சட்டசபை தொகுதி செய்தி தொடர்பாளர் மு.சதிஸ்குமார் ஆகிய நான் நாம் தமிழர் கட்சி பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் இன்று முதல் விலகிக் கொள்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் தெற்கு மாவட்ட பொருளாளர் சங்கர், தொகுதி துணைத் தலைவர் சடையன் ஐயா, தொகுதி துணைச் செயலாளர் பெரியசாமி, அயோத்தியாபட்டினம் ஒன்றிய பொறுப்பாளர் கூட்டாத்துப்பட்டி கார்த்திக் மற்றும் தேவேந்திரன். தம்பி விக்னேஷ், மகளிர் பாசறை பொறுப்பாளர் ஆனந்த் நித்யா மற்றும் 200-க்கும் மேற்பட்ட உறவுகள் இன்று முதல் கட்சி பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகிக் கொள்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் தமிழர் கட்சியில் கொள்கை கோட்பாடு என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. ஆதித்தமிழர் விடுதலை இல்லாது மீதித்தமிழர் வெல்லாது என்கிற கோட்பாட்டை பெயரளவிற்கு மட்டுமே மேடையில் பேசுகிறீர்கள். ஆனால் உண்மையில் கட்சியில் பொறுப்பு என்று வரும் பொழுது கட்சிக்காக உழைத்த, தங்களின் சொந்த உழைப்பால் ஈன்ற பொருளாதாரத்தை இழந்த அருந்ததியர்கள் எங்களை புறந்தள்ளி ஒதுக்கி வைக்கிறீர்கள் இது எங்களுக்கு கடும் மன உளைச்சலை தருகின்றது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று செயற்பாட்டு வரவை வைத்திருக்கிறீர்கள். ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு என்ன செயல் திட்டம் வகுத்தீர்கள் செயல்படுத்தி வருகிறீர்கள்?
என்பது தெரியவில்லை. இத்தனை ஆண்டுகாலம் எங்களுடன் பயணித்த உறவுகள் அனைவருக்கும் நன்றி. இவ்வாறு ஏற்காடு சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications