"சிபிஐ விசாரணையை விட".. கேப்டனின் புலன் விசாரணை படம் நன்றாக இருக்கும் – கலாய்த்த சீமான்
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தவெக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் சீமான் சிபிஐ விசாரணை தமிழகத்தை அவமதிக்கும் செயல். அவர்கள் புலன் விசாரணையை விட, எங்கள் அண்ணன் கேப்டன் நடித்த புலன் விசாரணை படம் நன்றாக இருக்கும் என்று கிண்டலடித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில், தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் அஸ்ரா கார்க் ஐபிஎஸ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

சிபிஐ விசாரணை
தவெக சார்பில் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மேற்பார்வையிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "சிபிஐ விசாரணையை நாங்கள் எப்போதும் ஏற்க மாட்டோம். அதை எப்போதும் மாநில உரிமை, தன்னாட்சிக்கு எதிரான ஒன்றாக பார்க்கிறேன். எங்களுடைய காவல்துறை விசாரணையில் என்ன குறை உள்ளது. அரசு தோல்வியை ஒப்புக் கொள்கிறதா. எல்லோருமே மாநில உரிமை பேசிக் கொண்டிருக்கிறீர்கள். சிபிஐ துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு மட்டும் இரண்டு மூளைகள் இருக்கின்றனவா.
அவமதிக்கும் செயல்
இத்தனை வருடங்களில் சிபிஐ விசாரணையில் நிரூபிக்கப்பட்ட பெரிய வழக்கு ஏதாவது இருக்கிறதா. அவர்கள் நியாயத்தை பெற்றுக் கொடுத்தார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம். காவல்துறை தமிழ்நாடு அரசிடம் உள்ளது. சிபிஐ மத்திய அரசிடம் உள்ளது. நாம் தான் நீதிமன்றம், தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வுத் துறைகள் தன்னாட்சி அமைப்புகள் என்று நாம் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் அந்த அமைப்புகள் ஆட்சியாளர்களின் 5 விரல்களைப் போன்று தான் இருக்கும். அது நீட்ட சொன்னால் நீட்டும், வளைய சொன்னால் வளையும். அதனால் அதைப்பற்றி பேசி பயனில்லை. சிபிஐ விசாரணையில் அப்படி என்னத்தான் கிடைக்கப் போகிறது. இவ்வளவு சிறந்த தமிழ்நாடு காவல்துறையை நீங்கள் அவமதிக்கிறார்கள். என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள். விசாரணை தொடங்குவதற்குள் ஏன் சிபிஐ விசாரணை போட வேண்டும்.
திசை திருப்பும் செயல்
திராவிட அரசு தோல்வியை ஒப்புக் கொள்கிறது. இது அந்த சம்பவத்தை மறக்கடித்து திசை திருப்புவதற்கு தான் பயன்படும். சிபிஐ நாளையில் இருந்து விசாரணையை தொடங்கி, அடுத்த இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்துவிடுவார்களா. அவர்கள் புலன் விசாரணையை விட, எங்கள் அண்ணன் கேப்டன் நடித்த புலன் விசாரணை படம் நன்றாக இருக்கும்.
சும்மா சொல்லிக் கொள்ளலாம். நீதிபதி தலைமையில் விசாரணையை போடுவது எல்லாம் திசை திருப்பி விடுவது தான். இப்படித்தான் நடக்கும். ஏன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தால் எதுவும் சொல்ல மாட்டீர்களா. மாநில தன்னாட்சிக்கு போராடிவிட்டு, இவ்வளவு பெரிய காவல்துறையை வைத்துக் கொண்டு அவர்கள் விசாரிப்பது சரியில்லை என்றால் எப்படி. இது ஒரு மாநிலம், காவல்துறையை அவமதிக்கும் செயல்.
யார் விசாரித்தால் என்ன
அஷ்ரா கார்க் தலைமையிலான விசாரணையை விஜய் கட்சியினர் வேண்டாம் என்கிறார்கள். சிறுநீரக திருட்டிற்கு நீதிமன்றம் போட்ட விசாரணையை அரசு வேண்டாம் என்கிறது. எப்படிப்பட்ட ஆட்சி முறை நடந்து கொண்டிருக்கிறது என்று பாருங்கள். நேர்மையாளனுக்கு என்ன பயம். யார் விசாரித்தால் என்ன. இவர்களை போன்ற கேடு கெட்ட கூட்டத்தை பார்க்க முடியாது. இவர்களை ஒழிக்க வேண்டும் " என்றார்.












Click it and Unblock the Notifications