Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அறநிலையத்துறை கூடாதென்பதல்ல.. கொள்ளையடிக்கும் கூடாரமாக ஆகிவிடக்கூடாது! பராசக்தி வசனம் பேசும் சீமான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயில்களை அறநிலையத்துறை நிர்வகிக்கக் கூடாதென்பதல்ல எங்கள் கொள்கை; கோயில்களைக் கொள்ளையடிக்கும் கூடாரமாக அறநிலையத்துறை ஆகிவிடக்கூடாது என்பதே எங்கள் கொள்கை என பராசக்தி படத்தின் வசனத்தை வைத்து விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை மக்கள் வழிபடத் திறக்காவிட்டால் நாம் தமிழர் கட்சி ஆலய நுழைவு போராட்டத்தை முன்னெடுக்கும் என்று நாங்கள் அறிவித்த பிறகு, இன்னும் ஒரு வாரத்தில் கோயில் திறக்கப்படும் என அறிவித்துள்ளார் மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

கோயில் திறக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்துகொண்டு, நாம் தமிழர் கட்சி அரசியல் செய்வதாகப் போகிறபோக்கில் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசு கோயிலைத் திறக்கவிருப்பது முன்கூட்டியே எங்களுக்குத் தெரியுமென்றால், நாம் தமிழர் கட்சி போராட்டத்தை அறிவிக்கும்வரை மேல்பாதி கோயில் விரைவில் திறக்கப்படும் என்பதை ஏன் அரசு அறிவிக்கவில்லை?

Seeman HRCE NTK

சீமான்:

கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை மக்கள் வழிபடத் திறக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு கூறியது ஏன்? இரண்டில் எது உண்மை? காலை 6 -7 மணி என்பது என்ன நேரம்? தீண்டாமை நேரமா? காலை ஒரு மணிநேரம் மட்டும் திறப்பது என்றால் அது வழிபாட்டுத் தலமா? அல்லது காலை உணவுக்கான உணவகமா? எல்லாம் முன்னமே தெரிந்து கொண்டு அறிவிக்கிறேன் என்றால் எங்கள் வீட்டு வாசலில் அழைப்பாணை ஒட்டுவது எங்களுக்கு முன்கூட்டியே தெரியாமல் போனது எப்படி? என்ற கேள்விக்கு மாண்புமிகு அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பதில் கூறுவாரா? இப்படிச் சிறிதும் அறமற்ற துறையாக தமிழ்நாடு அறநிலையத்துறை ஆனது ஏன்?

இந்து சமய அறநிலையத்துறை:

மேல்பாதி கோயிலைப் போன்றே தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பலநூறு கோயில்கள் திறக்கப்படாமலும், தேரோட்டம், திருவிழாக்கள் நடத்தப்படாமலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே? உண்மையிலேயே திமுக அரசிற்கு அக்கறை இருந்திருந்தால் மக்கள் வழிபடுவதற்காக அவற்றையெல்லாம் திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இதிலிருந்தே கோயிலை வைத்து அரசியல் செய்வது திமுகவா? அல்லது நாம் தமிழர் கட்சியா? என்பதை மக்கள் தெளிவாக அறிந்துகொள்வார்கள்.

கோவில் நிலம்:

கோயில் நிலமெனக்கூறி ஏழை மக்கள் குடியிருக்கும் வீடுகளைப் பறிக்கும் அறநிலையத்துறை, பெரும் செல்வந்தர்கள் வசமுள்ள பல்லாயிரம் ஏக்கர் கோயில் நிலங்களை இதுவரை மீட்காதது ஏன்? கோயில் பணம் பல்லாயிரம் கோடிகள் கொள்ளைபோவதைத் தடுக்காது, கோ பூஜை நடத்துவதும், பள்ளிக்கூடம் நடத்தவே பணம் இல்லாதபோது பசு மடம் கட்டுவதும்தான் திராவிட மாடலா?

அறநிலையத்துறை:

தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழ்நாடு அரசு தடை விதிப்பது ஏன்? தமிழில் குடமுழுக்குக்கோரி நாம் தமிழர் கட்சியினர் போராடினால் காவல்துறை மூலம் தடுத்து, தாக்குவது ஏன்? தமிழில் குடமுழுக்கு நடத்த போதிய அளவில் ஓதுவார்கள் இல்லையென்று தமிழ்நாடு அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தெரிவிப்பதற்கு வெட்கமாக இல்லையா? தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிப்புப் பலகை மட்டும் வைத்துவிட்டு பல நூறு கோயில்களில் அது நடைமுறையில் இல்லாமல் இருப்பது தான் உரிமையைப் பெற்றுக் கொடுத்த முறையா? இதுதான் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள தமிழ் வளர்ச்சியா?

திமுக அரசு:

கேரளாவில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கும், பத்மநாபசுவாமி கோயிலுக்கும், கர்நாடகாவில் உள்ள தாய் மூகாம்பிகை - மைசூர் சாமுண்டீஸ்வரி - மல்லிகா அர்ஜுனா கோயில்களுக்கும், ஆந்திராவில் உள்ள திருப்பதி - காளகஸ்தி கோயில்களுக்கும் என பிற மாநில கோயில்களுக்கு பல்லாயிரம் தமிழர்கள் வழிபடச்செல்லும் நிலையில், அங்கெல்லாம் தமிழில் அறிவிப்புப்பலகை ஏதும் வைக்கப்படாதபோது, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அறநிலையத்துறை சார்பாக தெலுங்கில் அறிவிப்புப் பலகை வைத்திருப்பதும் ஏன்? யாரை மகிழ்விப்பதற்காக இந்த அறிவிப்பு? இதுதான் திமுக அரசு கடைபிடிக்கும் இருமொழி கொள்கையா?

தமிழ்நாடு:

தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூட வாசல்களிலும், கோயில்கள் அருகிலும்தான் அதிகளவில் போதைப்பொருட்கள் விற்கப்படுகிறது என்பது மாண்புமிகு அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு தெரியுமா? தெரியாதா? கோயில்கள் அருகிலேயே தமிழ்நாடு அரசு நடத்தும் மதுக்கடைகளை அகற்ற அறநிலையத்துறை இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

திமுக அரசு:

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கோயில் வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஏழை எளிய மக்களுக்கு குத்தகைக்கும், வாடகைக்கும் விடப்பட்டுள்ள சிறு கடைகளின் ஒப்பந்தம் மற்றும் வாடகை தொகையை சிறிதும் மனச்சான்று இன்றி பன்மடங்கு உயர்த்தியுள்ளது. இதனால் ஒரு பக்கம் பல ஆயிரம் சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதன் மூலம் அறநிலையத்துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடிகள் வருமானம் வந்தும், வழிபட வரும் அன்பர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட செய்து தரப்படவில்லையென்றால் அந்த வருமானமெல்லாம் எங்கே செல்கிறது? யாருக்கு செல்கிறது? படிக்கிற பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடங்கள் கட்ட பணமில்லை என்று கையை விரிக்கும் இந்த அரசு பல கோடி செலவில் குடமுழுக்குகள் செய்து அதை கணக்கிட்டு விளம்பரம் செய்வதில் யாருக்கு என்ன பயன்?

கோயில் வருமானம்:

தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்கள் எத்தனை? ஒவ்வொரு கோயிலிலும் வரும் வருமானம் எவ்வளவு? அந்தத் தொகை எவற்றுக்கெல்லாம் செலவிடப்படுகிறது? தமிழ்நாட்டில் மதுவிலக்குத்துறை, மின்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறைக்கு அடுத்தபடியாக அதிக வருமானம் வரும் துறையாகவுள்ள அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான கோயில்களில் ஒரு கால பூசை கூட நடைபெறாமல், ஒரு விளக்குகூட ஏற்ற முடியாமல் இருளில் இருப்பதற்கு யார் காரணம்? ஆயிரக்கணக்கான கோயில்களில் நிர்வாகம் முதல் தூய்மைப்பணி வரை காலியாக உள்ள பல்லாயிரம் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படாதது ஏன்? கோயில்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் உட்பட அடிப்படை உரிமைகள் ஏதும் வழங்கப்படாதது ஏன்? கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்த திராவிட மாடல் அரசு, கோயில் வளாகத்தில் யானை மிதித்து இறந்த பாகர்களுக்கு உரிய துயர்துடைப்பு நிதி இதுவரை வழங்காதது ஏன்?

அறநிலையத்துறை வருமானம்:

சிறப்பு தரிசன வரிசை முதல் அர்ச்சனை சீட்டு, அர்ச்சனை தட்டு, மொட்டையடிப்பது, காது குத்துவது, தங்கத்தேர் இழுப்பது, அலகு குத்துவது, அன்னதானம், கோயில் கட்டுமானம், திருவிழா பணிகள், குடமுழுக்கு, கோயில் திருப்பணிகள், ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்கள், அன்றாட அலங்காரப் பணிகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது, பிரசாதம் வழங்குவது, உண்டியல் வருமானம், பக்தர்கள் காணிக்கை, கோயில் நகைகள் வரை தமிழ்நாடு அறநிலையத்துறைக்கு வருகின்ற வருமானத்தில் நடைபெறும் ஊழல்கள் வார்த்தைகளில் சொல்லிமாளக்கூடியதல்ல.

கோயில் நிதி:

திருச்செந்தூர் கோயிலில் 370 கோடியில் திட்டமிடப்பட்ட வணிக வளாகக் கட்டுமானத்தின் வரைபடம் தயார் செய்வதற்கே 8 கோடி ரூபாய் செலவானதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது என்றால் தமிழ்நாடு முழுவதும் அறநிலைநிலையத்துறையில் நடைபெறும் ஊழல்களை நம்மால் கற்பனை செய்யவே முடியவில்லை. தமிழ்நாடு அறநிலையத்துறையில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் ஊழல்கள், அதன் காரணமாகக் கொள்ளைபோகும் பல்லாயிரம் கோடிகள் கோயில் வருமானம் குறித்த தகவல்கள் அனைத்தும் அமலாக்கத்துறை விசாரணை மூலம் வெளிச்சத்திற்கு வந்தால் இந்த நாடு தாங்காது!

வெள்ளை அறிக்கை:

ஆகவே, தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் எத்தனை, ஒவ்வொரு கோயிலிலும் எந்தெந்த வழிகளில் வருமானம் வருகிறது, ஆண்டுதோறும் வரும் மொத்த வருமானம் எவ்வளவு, அவை எதற்கெல்லாம் செலவிடப்படுகிறது என்பது குறித்து, தமிழ்நாடு அரசு முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திய அதே பயபக்தியோடு மக்கள் மன்றத்தில் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டுமென கோரிக்கை வைக்கின்றேன்.

வணிகத்தலங்கள்:

இல்லையென்றால், அத்தகவல்களைத் திரட்டி விரைவில் நாம் தமிழர் கட்சி பொதுவெளியில் வெளியிடும்போது, அறமற்ற அறநிலையத்துறையால் வழிபாட்டுத்தலங்கள் எல்லாம் எந்த அளவிற்கு வணிகத்தலங்களாக மாறி நிற்கிறது என்பதை மக்கள் அறிந்துகொள்வார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுக அரசு:

சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை ஆய்வு மையம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முயன்ற திமுக அரசு, மக்களின் கடும் எதிர்ப்புக்கும், தொடர் போராட்டத்திற்கும் பிறகு அத்திட்டத்தைக் கைவிடப்போவதாக எங்களுக்கு தெரியவந்திருக்கிறது. அச்செய்தி உண்மைக்கு மாறாக இருக்கும்பட்சத்தில் மீண்டும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்துக்கொள்கிறேன்.

பராசக்தி வசனம்:

"கோயில் கூடாது என்பதற்காக அல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாய் ஆகிவிடக்கூடாது என்பதற்காக..!" இந்த உரையாடலை எங்கோ கேட்டதுபோல் உள்ளதா? உங்கள் 'பராசக்தி' படத்தின் வசனம்தான்! கோயில்களை அறநிலையத்துறை நிர்வகிக்கக் கூடாதென்பதல்ல எங்கள் கொள்கை; கோயில்களைக் கொள்ளையடிக்கும் கூடாரமாக அறநிலையத்துறை ஆகிவிடக்கூடாது என்பதே எங்கள் கொள்கை!" என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+