Seeman Vijay: "விஜய் ஒரு பெஸ்ட் நியூஸ் ரீடர்! கரப்பான்பூச்சி கூட சிம்மாசனம் கேட்கும்" சீமான் தாக்கு
சென்னை: விஜய் ஒரு செய்தி வாசிப்பாளர், ஒட்டடைக்குச்சி ஓரமாக சென்றால் கரப்பான்பூச்சி சிம்மாசனம் கேட்குமாம் என தவெக தலைவர் விஜய்யை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார்.
பன்னாட்டு தமிழ் கிறிஸ்தவப் பேராயம் மற்றும் சமூகநீதிப் பேரவை நடத்திய நிகழ்ச்சியில் சீமான் பேசுகையில், தம்பி விஜய்யை நான் எதிர்க்கவில்லை. கேள்வி எழுப்பினாலே அதை எதிர்ப்பதாக கூறுகிறார்கள்.

தமிழகத்தில் பாஜக தனித்து நின்று தன்னை விட ஒரு வாக்கு கூடுதலாக வாங்கட்டும் பார்க்கலாம். நான் புகழ்பெற்ற நடிகராக இருந்தால் அனைத்து ஊர்களிலும் ரசிகர்கள் இருப்பார்கள். அவர்களை தொண்டராக்கிக் கொண்டு உடனடியாக கட்டமைப்பை உருவாக்கலாம்.
ஆனால் எந்த பின்புலமும் இல்லாமல் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குகளை பெறும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற திமுகவை விட பல்வேறு வாக்குச் சாவடிகளில் எங்களுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்தன. இங்கு மிகப் பெரிய கட்சி நாம் தமிழர் கட்சிதான்.
திமுக- தவெக இடையேதான் போட்டி என விஜய் சொல்கிறார். விக்கிரவாண்டியிலும், ஈரோடு கிழக்கிலும் அவர் கட்சி போட்டியிடவில்லை. அங்கு உண்மையிலேயே நாம் தமிழருக்கும் திமுகவுக்கும்தான் போட்டி இருந்தது.
இருவரும் திரைத்துறையில் இருந்து வந்தவர்கள்தான். ஆனால் நான் ரசிகர்களை சந்திக்கவில்லை. மக்களைத்தான் சந்தித்தேன். போட்டி என்பது கூட்டத்தை வைத்து சொல்ல முடியாது. கருத்தியல் ரீதியாக சொல்ல வேண்டும். திராவிடமா- தமிழ் தேசியமா என்ற போட்டிதான் உள்ளது.
கூட்டணி வைப்பதாக இருந்தால் இந்த 15 ஆண்டுகளில் எத்தனை நெருக்கடி வந்த போதும் வைத்திருக்க மாட்டேனா, எந்த காலத்திலும் திராவிட கட்சிகளுடனும் தேசிய கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என நான் கட்சி தொடங்கிய போதே அறிவித்தேன். இப்போதும் தனித்துதான் நிற்போம். வரும் 2029 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவோம்.
நாதக பாஜகவின் பி டீம் என்றால் திமுக ஏ டீம். மக்கள் பிரச்சினைகளை எழுதி வைத்து பார்த்து படிப்பவர்கள் எப்படி தலைவனாக இருக்க முடியும்? திருடர்கள் கூடியிருக்கும். விஜய் ஒரு தனி விமானத்தில் பிரச்சாரத்திற்கு செல்கிறார். அங்கு போய் "என்ன எல்லாரும் நல்லா இருக்கீங்களா?" என கேட்கிறார்.
எனவே விஜய் ஒரு பெஸ்ட் நியூஸ் ரீடர். காஸ்ட்லி நியூஸ் ரீடர். 5 ஆண்டுகளில் தண்டவாளம் போடுவேன் என சொன்னார்களே போட்டார்களா? என பார்த்து பார்த்து செய்தி படிப்பது போல் அதை சப்தமாக படிக்கிறார் விஜய். அதை கூட்டமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.
ஆன்றோர்களும் சான்றோர்களும் இருந்த அறிவார்ந்த இன மக்கள் அரசியல் செய்த தளத்தில் நடிப்பது மட்டுமே நாடாள போதும் என சொல்வதை இந்த தமிழ் சமூக மக்கள் ஏற்கிறார்களா என்பதுதான் கேள்வி. விஜய்க்கு அவர் துறை சார்ந்ததிலேயே பொது அறிவு கிடையாது.
சினிமா துறையில் என்னென்ன பிரச்சினை இருக்கிறது, அதை எப்படியெல்லாம் தீர்க்கணும் என்பது விஜய்க்கு தெரியாது. மக்கள் கண்டெடுத்த தலைவர்கள் நடித்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் கண்டுகளித்த நடிகன் தலைவனாக ஆசைப்பட்டு கொண்டிருக்கிறார் என அந்தகாலத்திலேயே பாடிவிட்டார்கள். இவ்வாறு விஜய்யை சீமான் விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications