தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் என்ன வேலை? 2 கட்சி தோள்களில் ஏறி சவாரி.. சீமான் அட்டாக்!
திருச்சி: "காங்கிரஸ் கட்சியை அடியோடு ஒழிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிதோல்வியடைவது எனக்கு மகிழ்ச்சிதான். திராவிட கட்சிகளின் தோள்களில் ஏறிக்கொண்டுதான் காங்கிரஸும், பாஜகவும் வசதியாகப் பயணம் செய்கின்றன. தமிழகத்தில் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் என்ன வேலை?" எனக் காட்டமாகப் பேசியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தஞ்சையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று தண்ணீர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றடைந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய சீமான், "காங்கிரஸ் கட்சியை அடியோடு ஒழிக்க வேண்டும். காங்கிரஸ் தோல்வியடைவது எனக்கு மகிழ்ச்சிதான். காங்கிரஸ் வீழ்வதில் எனக்கு பெருமையே. காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்குத் தான் நான் களத்திற்கு வந்தேன். தமிழகத்தில் காமராஜர் மறைவுக்குப் பின்பு காங்கிரஸ் கட்சி அழிந்துவிட்டது. தற்போது இருப்பது ஒரு கம்பெனி தான்.
எனக்கு இருக்கும் வலியும், வன்மமும் உலகத்தில் யாரிடமும் இருக்கிறது என்று சொல்ல முடியாது. திராவிட கட்சிகளின் தோள்களில் ஏறிக்கொண்டுதான் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் வசதியாகப் பயணம் செய்கின்றன. தமிழகத்தில் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் என்ன வேலை இருக்கிறது? தேசியக் கட்சிகள் எந்த மாநிலத்திற்கும் தேவை இல்லை.
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதற்கு எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையும் ஒரு காரணம்தான். திட்டமிட்டு எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் நீக்கப்படுவார்களா என்கிற அச்சம் உள்ளது. SIR-ஐ அதிமுகவின் எஜமானர்களான பாஜகவினர் கொண்டு வந்ததால் அதை ஆதரிக்கிறார்கள். எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்ப்பதாகக் கூறும் திமுக, சட்டசபையைக் கூட்டி அதை அறிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார் சீமான்.
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு அளிக்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சீமான், "தூய்மைப் பணியை தனியார் முதலாளிகளுக்கு ஒப்பந்தம் விட்டுவிட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தர வேலை தராமல் 3 வேளை உணவு கொடுப்பது, அவர்களை சமாதானப்படுத்தத்தான்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications