இளம்பெண்ணுக்கு சித்ரவதை.. திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன், மருமகளை கைது பண்ணுங்க! சீறிய சீமான்
சென்னை: வீட்டு வேலைக்கு சென்ற தன்னை எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் கொடூரமாக தாக்கியதாக இளம்பெண் ஒருவர் வேதனை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைக்காக இளம்பெண் ஒருவர் பணியமர்த்தப்பட்டிருக்கிறார். பணியில் சேர்ந்த இரண்டு நாட்களில், வேலை செட் ஆகவில்லை, என்னால் இவ்வளவு வேலை செய்ய முடியாது என்று கூறி அங்கிருந்து வெளியேற முயன்றிருக்கிறார். ஆனால், கருணாநிதியின் மகனும், மருமகளும் இப்பெண்ணை வெளியேற விடாமல் தொடர்ச்சியாக வேலை வாங்கியதாக தெரிகிறது. இது குறித்து இளம்பெண்ணின் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மருமகள் மற்றும் மகனை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
"பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் கொத்தடிமைபோல நடத்தி, கொடும் சித்திரவதைக்குள்ளாக்கிய செய்தியானது அதிர்ச்சியளிக்கிறது. தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்ணீர்மல்கக் கூறும் அப்பெண்ணின் காணொளியைப் பார்க்கிறபோது நெஞ்சம் பதைபதைக்கிறது. அப்பெண்ணுக்கு நடந்தேறியது சொல்லவியலா மனிதவதை! குரூரத்தின் உச்சம்!
எளிய குடும்பப் பின்னணியில் பிறந்ததால், வறுமையையும், ஏழ்மையையும் போக்க வீட்டு வேலைக்குச் சென்ற அப்பெண்ணுக்கு ஊதியத்தை வழங்காது, இரவு பகலென்றும் பாராது ஓய்வில்லாதவகையில் கடுமையான வேலைகளைக் கொடுத்து உழைப்பைச் சுரண்டியதோடு மட்டுமல்லாது, நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்குக் கொடூரமாகத் தாக்கியும், தினந்தோறும் துன்புறுத்தியும் வந்த அக்குடும்பத்தினரின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரது குடும்பமெனும் அதிகாரத்திமிரே மனிதத்தன்மையற்ற இக்கொடூரங்களை அப்பெண்ணின் மீது பாய்ச்சுவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறதென்பது வெளிப்படையானதாகும். எளிய மனிதர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் இக்கோரத்தாக்குதல்களும், வன்முறைவெறியாட்டங்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய கொடுங்குற்றங்களாகும்.
ஆகவே, தமிழக முதல்வர் ஸ்டாலின், இவ்விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து, இளம் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கித் துன்புறுத்திய சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மருமகள் மற்றும் மகனை உடனடியாகக் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications