திருமாவளவன் மீது கவிதா புகார்.. யாருமே வாய் திறக்கலியே..சீமானுக்கு மட்டும் ஏன்? சொல்றது யார் பாருங்க
சென்னை: சீமானுக்கு போலீசார் சம்மன் வழங்கியுள்ளதால், நேரடி விசாரணை அவரிடம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜனநாயக மாதர் சங்கமும் இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் Vs நடிகை விஜயலட்சுமி விவகாரம் வெடித்து கிளம்பி உள்ளது.. இருவருமே மாறி மாறி குற்றச்சாட்டுகளை அள்ளிவீசிக் கொண்டிருக்கிறார்கள்..

விஜயலட்சுமியை திமுக தூண்டிவிடுகிறது என்று சீமான், பகீரை கிளப்பியுள்ளதால், அரசியல் ரீதியாகவும் இந்த தாக்கம் ஏற்பட்டு வருகிறது.. மற்றொருபுறம், சீமானுக்கான நெருக்கடிகள் கூடிவருவதாகவும், இணையத்தில் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.
சீமானுக்கு சம்மன்: சீமானுக்கு சம்மன் தரப்பட்டுள்ளது.. அதனால், நாளை அதாவது, 12-ந்தேதி வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராவார் என்கிறார்கள். நாளையே சீமானிடம் போலீசார் விசாரணை நடத்தவும், அவரிடம் வாக்குமூலம் பெறவும் போலீசார் தயாராகி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில்தான், சீமான் விவகாரத்தில், ஜனநாயக மாதர் சங்கம் தலையிட்டிருக்கிறது.. நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் அரசியல் தலையீடு இல்லாமல் சீமான் மீது போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக ஆணையர் அலுவலகத்தில் 2 நாட்களுக்கு முன்பு புகார் தரப்பட்டுள்ளது.
போலீசில் புகார்: பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய மாதர் சங்கத்தினர், "நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கின் விசாரணையில் சுணக்கம் அடைந்துள்ளது. அதனை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக அரசியல் கட்சியின் தலைவராக உள்ள சீமான், ஆண், பெண் சமத்துவம் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார்.
ஆனால் விஜயலட்சுமி புகார் பற்றி வெளிப்படையாக பேசாமல் அவரை கேவலப்படுத்தும் வகையிலேயே பேசி வருகிறார். நடிகை விஜயலட்சுமி குறித்து மிக மோசமான வீடியோக்களை நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டும் வருகிறார்கள்.. சீமான் இதனை கண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நடிகை விஜயலட்சுமி அப்போது அச்சுறுத்தல் காரணமாக வழக்கை வாபஸ் பெற்றிருக்கலாம். ஆனால் இப்போது நீதி வேண்டும் என்று போராடுவதால் சீமான் மீது உரிய நடவடிக்கையை போலீசார் விரைந்து எடுக்க வேண்டும்...
பரபரப்பு: எந்த ஒரு அரசியல் தலையீடும் இல்லாமல் காவல்துறை விசாரணை நடத்தி சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
நாலாபக்கமும், நெருக்கடிகள் சூழ்ந்து வரும்நிலையில், போலீசாரும் தங்கள் விசாரணையை துவங்கப்போகும் நிலையில், சீமான் விவகாரம் பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது. ஆனால், சீமான் பற்றி எதுவுமே பேசாமல், விஜயலட்சுமி புகார் பற்றியும் எதுவுமே கருத்து சொல்லாமல், விஜயலட்சுமிக்கு சப்போர்ட் செய்த மாதர் சங்கம் மீது பாய்ந்துள்ளார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்.
நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஜனநாயக மாதர் சங்கம், திருமாவளவன் மீது கவிதா கொடுத்த புகாருக்கு பேச மறுத்து, மவுனம் சாதித்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்புள்ளார்.. சின்மயி புகார் குறித்து வாயே திறக்கவில்லையே ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கண்டனம்: இதுகுறித்து அர்ஜுன் சம்பத் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அமைப்பு தான் ஜனநாயக மாதர் சங்கம்... நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஜனநாயக மாதர் சங்கம், திருமாவளவன் மீது கவிதா என்ற பெண் கொடுத்த புகார் குறித்து, பேச மறுப்பது ஏன்? வைரமுத்து மீது, திரைப்பட பாடகி சின்மயி கொடுத்த புகார் குறித்தும், ஜனநாயக மாதர் சங்கம் ஏன் பேச முன்வரவில்லையே ஏன்?
இன்னும் எத்தனையோ கொடுமைகளும், அநீதிகளும் பெண்களுக்கு எதிராக நடக்கின்றன. அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, ஜனநாயக மாதர் சங்கம் ஏன் போராட்டம் நடத்தவில்லை? ஜனநாயக மாதர் சங்கம் என்ற பெயரில், அரசியல் செய்யும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் உண்மை முகத்தை, மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்போம்" என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
பரபரப்பு: இந்த அறிக்கையை பார்த்ததுமே, விசிகவினர் கடுப்பாகி, பதிலடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பரபரப்புகளுக்கு நடுவில், நாளைய தினம் சீமானிடம் விசாரணை நடத்தப்படுகிறது..
அப்போது சீமானிடம் வாக்குமூலம் பெறும் முயற்சியிலும் போலீசார் மும்முரமாகி வருவதாக தெரிகிறது.. விஜயலட்சுமி தந்த வாக்குமூலங்களின் அடிப்படையிலும், சீமானிம் கேள்விகள் கேட்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், சீமான் மீதான இந்த பரபரப்புகளால், அரசியல் களமே அனலடித்து காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications