தேர்தல் பத்திரம் கிடக்கட்டுமே.. திரள் நிதி தாருங்கள் உறவுகளே!தேர்தல் செலவுக்கு பணம் கேட்கும் சீமான்!
சென்னை: தேர்தல் பத்திரங்கள் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்திருப்பது தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தல் செலவுக்காக பொதுமக்களிடம் திரள் நிதி -கிரவுட் ஃபண்டிங்-Crowd Funding மூலம் பணம் திரட்டுவதாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசால் 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இத்தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பல்லாயிரம் கோடி ரூபாய் நன்கொடை பெற்றது. ஆனால் யாரிடம் இருந்து எந்த கட்சி எவ்வளவு தொகை பெற்றது என்கிற விவரங்கள் மறைக்கப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு: தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், தேர்தல் பத்திரம் திட்டம் என்பதே செல்லாது- அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என தீர்ப்பளித்தது. அத்துடன் தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி பகிரங்கப்படுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்தே நாடு முழுவதும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, தேர்தல் செலவுக்கு பணம் தேவை.. ஆகையால் பொதுமக்கள் நிதி தாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளது சீமானின் நாம் தமிழர் கட்சி.
தடையாக இருக்கும் பொருளாதாரம்: இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்ட வேண்டுகோள்: 2024 இந்திய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி இம்முறையும் தனித்துத் தேர்தல் களம் காண்கின்றது. பெரும் பொருளாதாரம், அதிகாரம், ஊடகம் போன்ற வலிமைகளைக் கொண்ட கட்சிகளாக ஒன்றிய, மாநில ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் விளங்குகின்றன. இருந்தும், தாங்கள் செய்த சாதனைகளையோ, மக்கள் நலன்சார்ந்த செயல்களையோ முன்னிறுத்தி வாக்கு கேட்காமல், பிற பிழையான வழிகளைக் கடைப்பிடித்து, வெற்றிபெறும் நோக்கில் தொடர்ந்து களம் கண்டு வருவதைக் கடந்த காலங்களில் நாம் ஒவ்வொருவரும் நேரடியாகக் கண்டிருக்கிறோம். ஆனால் சமரசமின்றி மக்கள் நலன் சார்ந்து தனித்தியங்கும் நாம் தமிழர் கட்சி, மக்களைப் பெருமளவில் சென்றடையப் பொருளாதாரம் பெரும் தடையாக உள்ளது.

பணமே இல்லாமல் களத்தில்.. : அறத்தை அடிப்படையாகக் கொண்டு நேர்மையுடன் களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சி, படித்த, பொருளாதார நிறைவைக் கண்டவர்கள் மட்டுமல்லாது, வறுமை கோட்டுக்குக் கீழுள்ளவர்கள், உழவர் குடிகள், எளிய பின்புலம் கொண்ட இளைஞர்கள், பெண்கள் ஆகியோரை நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்துகிறது. தேர்தல் செலவாக ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 95 இலட்சம் வரை செலவு செய்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. ஆனால், நாம் தமிழர் கட்சி மிகக் குறைந்த பொருளாதார நிலையிலேயே தொடர்ந்து தேர்தல் களம் கண்டு, பெரும் வளர்ச்சியை ஈட்டியுள்ளது அனைத்துத் தரப்பினரையும் வியக்க வைத்துள்ளது.
Crowd Funding மூலம் நிதி நிதிரட்டல்: அச்சு, வலையொளி மற்றும் தொலைக்காட்சி ஊடக விளம்பரங்கள், தலைமைப் பரப்புரைப் பயணச் செலவுகள், வேட்பாளர் அறிமுகக் கூட்டங்கள், முதன்மைப் பரப்புரையாளர்களின் பயணச் செலவுகள், தேர்தல் ஒருங்கிணைப்புப் பணிச் செலவுகள் எனப் பலதரப்பட்ட செலவுகளுக்குக் கணிசமான பொருளாதாரம் தேவைப்படுகின்றது. தேர்தல் செலவுகளுக்காக மக்களிடம் திரள்நிதி (Crowd Funding) மூலம் பொருளாதாரத்தைத் திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் வரவு - செலவு கணக்குகள் வெளிப்படையாக இணையத்தில் வெளியிடப்படும். எனவே இத்திட்டத்திற்குப் பேராதரவு தந்து பொருளுதவி செய்து வலிமை சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications