கஜானா காலி, களஞ்சியம் காலி.. இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு.. அமைச்சர் சேகர்பாபு பதிலடி
சென்னை: திமுக பொறுப்பேற்ற பின்னர் நிதியின்மை ஒருபுறம் இருந்தாலும், கஜானா காலி களஞ்சியம் காலி என்றாலும் மக்களுக்கான அனைத்துப் பணிகளும் பாதிக்கப்படாமல் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சியினர் எதாவது குறைகளைச் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா ஆட்சியில் மக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே காரணத்துக்காக திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 42 மாதங்களில் பல திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் அவை முழுமையாக முடிக்கப்படாமலும், கிடப்பில் போடப்பட்டுள்ளன என பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டிருந்தார்.

மேலும், ஸ்டாலின் அவரது தந்தை பெயரை அரசு கட்டடங்களுக்கு வைக்க வேண்டும் என்றால் அவரது அறக்கட்டளை சார்பில் அப்பணிகளை மேற்கொள்ளலாம். போதிய நிதி இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் பல முடக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, தேவையான நிதியை உடனடியாக திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், திமுக பொறுப்பேற்ற பின்னர் நிதியின்மை ஒருபுறம் இருந்தாலும், கஜானா காலி களஞ்சியம் காலி என்றாலும் மக்களுக்கான அனைத்துப் பணிகளும் பாதிக்கப்படாமல் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சியினர் எதாவது குறைகளைச் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நிதியின்மை ஒருபுறம் இருந்தாலும், கஜானா காலி, களஞ்சியம் காலி என்றாலும், முதல்வர் ஸ்டாலினின் சிந்தை எப்பொழுதும் காலியாக இருந்ததில்லை.
அதனை நிரூபிக்கும் வகையில் மத்திய அரசு ஜிஎஸ்டி வருவாயில் முறையான நிதிப் பகிர்வு அளிக்காத நிலையிலும், வெள்ள நிவாரணம் கோரிய போதும் அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காத நிலையிலும், வளர்ச்சிப் பணிகள் எந்தவகையிலும் பாதிக்கப்படாமல் நடைபெற்றன. அதே நேரத்தில் புதிது புதிதான திட்டங்கள், தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட உறுதி மொழிகள் அத்தனையும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
ஒட்டுமொத்த இந்தியாவிலேயே வலிமை மிக்க பத்து தலைவர்களில் ஒருவராக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார். நிதியின்மை ஒருபுறம் இருந்தாலும் எங்களுடைய அரும் பணிகளுக்கு கிடைத்த நற்சான்றாக இதனை கருதுகின்றோம். முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்திற்கு விடியல் பயணம்.
மகளிர் உரிமைத் தொகைக்கு ஆயிரம் கோடிகளை ஒதுக்கி மக்களின் வாழ்வில் இன்பத்தை உண்டாக்கும் அமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார். கட்டுமானத் துறையை எடுத்துக் கொண்டால் சைதாப்பேட்டையில் அறிவிக்கப்பட்ட கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூலகம், ஜல்லிக்கட்டுக்கான மைதானம் என இந்த ஆட்சியின் வேகமான பணிகளுக்கு சான்றாக உள்ளது.
எதிர்க்கட்சி என்ற தளம் இருக்கிறபோது இதுபோன்ற குறைகளைச் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், எங்களுடைய பணி மக்கள் பணி. மக்களுக்குத் தேவையான, மக்கள் விரும்புகின்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் அரசாக திமுக அரசு இருக்கும் என்பதை மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள்.
இதற்கான விடையை 2026 ஆம் ஆண்டில் மக்கள் சொல்வார்கள். நிச்சயம் திமுகவை வரலாற்றில் இல்லாத அளவுக்கு அறுதிப் பெரும்பான்மையோடு திமுகவை ஆட்சியில் அமர்த்துவார்கள் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications