"சாவர்க்கர் வாழ்க" இந்த கோஷம் ஏற்புடையதா.. சுசீந்திரம் கோயிலில் நடந்தது என்ன? சேகர்பாபு விளக்கம்!
நெல்லை: கோயில் தேரோட்டத்தின் போது சாவர்க்கர் பெயரை சொல்லி, அவர் வாழ்க என்ற கோஷமிடுவது ஏற்புடையதா என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பி இருக்கிறார். கோயிலில் மதவெறியை வளர்க்கக் கூடாது என்று கூறிய சேகர்பாபு, பாரத் மாதா கி ஜே என்ற கோஷத்தை கோயிலுக்கு வெளியில் சொல்லிக் கொள்ளட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாமலையார் சுவாமி கோயில் தோரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மனோ தங்கராஜ் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது திடீரென, பாரத் மாதா கீ ஜே.. சாவர்க்கர் வாழ்க என்று கோஷம் எழுப்பப்பட்டது. இதனால் டென்ஷனான அமைச்சர் சேகர்பாபு, கோயில் எழுப்ப வேண்டிய கோஷத்தை மட்டும் எழுப்புங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

ஆனாலும் சிலர் மீண்டும், "சாவர்க்கர் வாழ்க" என்று கோஷம் எழுப்ப, அமைச்சர் சேகர்பாபு, நீங்கள் சோறு தான் சாப்பிடுகிறீர்களா.. இல்லை வேறு ஏதாவது சாப்பிடுகிறீர்களா என்று கேட்டார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இந்த வீடியோவும் வேகமாக பரவிய நிலையில், தற்போது சேகர்பாபு அப்படி நடந்து கொண்டது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக நெல்லையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நான் பக்தர்களை அவதூறாக பேசவில்லை. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கிறது. அராஜகத்திற்கோ, அத்துமீறலுக்கோ அடங்கும் ஆட்சி திமுக ஆட்சி அல்ல. நாங்கள் அன்பாக வந்தால் அரவணைப்போம். அதிகாரத் திமிரோடு வந்தால், நிச்சயம் முட்டிமோதி பார்த்துவிடுவோம்.
திருக்கோயில் தேரோட்டத்திற்கு சென்றிருந்த போது விரும்பத்தகாத கோஷம் எழுப்பப்பட்டது. அவர்கள் பாரத் மாதா கி ஜே என்று கோஷம் எழுப்புகிறார்கள். அவர் சொல்லிக் கொள்ளட்டும்.. ஆனால் அதனை கோயிலில் கோஷம் எழுப்பக் கூடாது. எங்களை பொறுத்தவரை தமிழ் வாழ்க, தமிழ்நாடு வாழ்க என்பதே கொள்கை. அதுமட்டுமல்லாமல் சாவர்க்கர் பெயரை சொல்லி வாழ்க என்று கோஷமிடுகிறார்கள்.
அதனை எப்படி ஏற்புடையது? ஆன்மிகமும், பக்தியும் அறத்தை மட்டுமே உணர்த்துகிறது. அராஜகத்தை உணர்த்தவில்லை. 3 மதங்களிலும் அமைதி, அடக்கம், ஒழுக்கம்தான். அமைதி காக்கின்ற இடத்தில் மனிதநேயத்தை வளர்க்க வேண்டும். கோயிலில் மதவெறியை வளர்க்க கூடாது. கலையை வளருங்கள்.. நாங்கள் உங்களோடு இருக்கிறோம். கலவரத்தை வளர்க்காதீர்கள். அதற்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications