உள்ளே குண்டு இருக்கு, "சுட்டுத்தள்ளுங்க".. மாஜி ஐபிஎஸ்ஸே பேசறாரே.. Suo Moto எங்கே: செல்வப்பெருந்தகை
அண்ணாமலை மீது நடவடிக்கை வேண்டும் என்று காங்கிரஸின் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: தீவிரவாதத்தை தூண்டும் வகையில், பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவருடைய இந்த பேச்சுக்கு இந்திய ஆயுதச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எல்லா முகாந்திரமும் உள்ளது என்று தமிழக காங்கிஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், திமுக கவுன்சிலர் சின்னசாமிக்கு இடையே கடந்த 8-ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது. அது பின்னர் கைகலப்பானது.
இதில், பிரபாகரன், படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி கடந்த 14-ம் தேதி உயிரிழந்தார்.. குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்ததில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே பிரபு அடித்துக்கொல்லப்பட்டது உறுதியானதுடன், இதில், தொடர்புடைய திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

கர்னல் பாண்டியன்
எனினும், இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.. ராணுவ வீரர் கொலை சம்பவத்தை கண்டித்து பாஜகவின் முன்னாள் ராணுவ பிரிவு சார்பாக போராட்டமும் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் ராணுவ வீரருமான பாண்டியன் பேசியபோது, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.. இங்கு அமர்ந்திருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு குண்டு வைப்பதில் கெட்டி காரர்கள், சுடுவதில் கெட்டிக்காரர்கள், சண்டையிடுவதில் கெட்டிக்காரர்கள், ஆகையினால் இந்த வேலைகள் எங்களுக்கு நன்றாக தெரியும், எனவே எங்களை இதனை செய்ய வைத்து விடாதீர்கள் என்று பேசியிருந்தார்.

சுடத்தெரியுமாமே
இதையடுத்து, கர்னல் பாண்டியன் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும் இந்த பேச்சு மிகுந்த பரபரப்பையும், அதையொட்டிய கண்டனங்களையும் கிளப்பி விட்ட நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, பாண்டியனின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தான் ஒரு ஓய்வுபெற்ற ராணுவவீரர் என்றும் கருதாமலும், சமூக அக்கறையில்லாமலும், பொறுப்பில்லாமலும் பொதுவெளியில் இதுபோல் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்றும் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.

திருமா கோபம்
இந்தநிலையில், இதே கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பேசியதாக வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், உங்களுடைய கையில் துப்பாக்கி இருக்கு, துப்பாக்கிக்குள்ள குண்டு இருக்குனா ஆர்டர் கொடுக்க மோடி இருக்கார்னா சுட்டு தள்ளிட்டு வந்துட்டே இருங்க.. மிச்சதை பாஜக தமிழகத்தில் பார்த்து கொள்ளும் என அண்ணாமலை பேசியுள்ளதாக அதில் பதிவாகி இருந்தது. அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு விசிக திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

சுட்டுத்தள்ளுங்க
அந்தவகையில், தமிழக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையும் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "இந்திய ஆயுதச் சட்டம் 1959 நன்கு அறிந்த ஒரு முன்னால் ஐபிஎஸ் அதிகாரி"'உங்களுடைய கையில் துப்பாக்கி இருக்கு, துப்பாக்கிகுள்ள குண்டு இருக்கு, ஆர்டர் கொடுக்க மோடி இருக்கார், நீங்கள் சுட்டு தள்ளிவிட்டு வந்து கொண்டிருங்கள்" என்று கூறுகிறார் என்றால், இது தீவிரவாதத்தை தூண்டுவது இல்லையா? எல்லாம் தெரிந்த ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இதை வேண்டுமென்றே கூறுகிறார் என்றால் அதன் பின்னணி என்ன?

SUO MOTO
இவருடைய இந்த பேச்சுக்கு இந்திய ஆயுதச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எல்லா முகாந்திரமும் உள்ளது. ஆகவே உடனடியாக மாநில அரசு அவர் மேல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இந்த பேச்சின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் கூட தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டு Suo Moto வாக எடுத்துக்கொண்டு வழக்கு பதிவு உத்தரவிடலாம். ஆகவே மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications