விஜயதரணியின் MLA பதவியை தகுதி நீக்கம் செய்திடுக! சபாநாயகருக்கு செல்வப்பெருந்தகை அவசரக் கடிதம்!
சென்னை: பாஜகவில் இணைந்த விஜயதரணியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு சபாநாயகர் அப்பாவுவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து விலகி வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் இந்த தகுதி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.விஜயதரணி அவர்கள் இன்று (24.2.2024) புதுடெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பிற்பகல் 2 மணியளவில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு அனுப்பி உள்ளார். ''
''கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து விலகி வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் திருமதி. எஸ். விஜயதரணி அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ''
சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் பதவி, கன்னியாகுமரி தொகுதி எம்.பி.சீட், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி என வரிசையாக மூன்று பதவிகளை எதிர்பார்த்து காத்திருந்த விஜயதரணிக்கு கடைசி வரை ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதால் இன்று பாஜகவில் இணைந்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளார். விஜயதரணி எம்.எல்.ஏ. வுடன் இன்னும் 2 முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அது போல் யாரும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications