செங்கோட்டை டூ கோவை.. ரயிலில் இனிமேல் நெரிசல் இல்லை.. வரிசையாக வந்த ஸ்பெஷல்ஸ்.. ஆனாலும் ஒரு கோரிக்கை
சென்னை: தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.. அந்த ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வருவதால், பயணிகள் வசதிக்காக கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி மற்றும் வட மாநில சாத் பண்டிகையை முன்னிட்டு கோவை - பீகார் மாநிலம் பரவுனி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

பண்டிகை: தீபாவளி பண்டிகை வரப்போகிறது.. இதனால் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை, கோவை, திருப்பூர், புதுச்சேரி, பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்..
எனவே பயணிகளுக்கு வசதியாக முன்பதிவு செய்யப்படாத ரயில்கள், கூடுதல் ரயில் பெட்டிகள், சிறப்பு ரயில்கள் இயக்கி வருகிறது. அதன்படி தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.. கன்னியாகுமரி, செங்கோட்டை, கோவை, கன்னியாகுமரிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
வெயிட்டிங் லிஸ்ட்: ஆனால், ஒவ்வொரு எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் நிலை காணப்படுகிறது. நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் கூட சில நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிவடைந்து விட்டதாக கூறுகிறார்கள்.. அதுமட்டுமல்ல, தமிழகத்தில் இயங்கும் அனைத்து ரயில்களையும் கூடுதல் சேவையாக, அக்டோபர் 29 இரவு முதல் நவம்பர் 4 வரை தொடர்ந்து இயக்கினால் மட்டுமே பொதுமக்களால் சிரமமின்றி பயணிக்க முடியும் என்றும் சொல்கிறார்கள்.
மதுரை- - போடி, மதுரை- -செங்கோட்டை, மயிலாடுதுறை- - செங்கோட்டை, மதுரை-- ராமேஸ்வரம், மதுரை- -கோவை, திருச்சி-- காரைக்குடி, விருதுநகர்- -காரைக்குடி, செங்கோட்டை- -ஈரோடு, கோவை--நாகர்கோயில், திருநெல்வேலி- -செங்கோட்டை , காட்பாடி --விழுப்புரம், திருச்சி- -பாலக்காடு போன்ற ரயில்கள் சென்றடையும் இடங்களில் பல மணி நேரம் யார்டில் நிறுத்தப்படுகின்றன.
முன்பதிவில்லா ரயில்: இவற்றை மறு மார்க்கத்தில் கூடுதல் சேவையாக முன்பதிவில்லா ரயிலாக ஒரு டிரிப் வந்து செல்லும் வகையில் இயக்கினால், மக்களுக்கும் பயன்கிடைக்கும்.. ரயில்வேக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் பயணிகள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல, 10க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.. அந்த ரயில்களுக்கான முன்பதிவு, துவங்கிய சில நிமிடங்களில் முடிந்துவிட்டது.
தென் மாவட்டம்: ஆனால், தென் மாவட்டங்களுக்கான பயணியர் எண்ணிக்கை அதிகம் என்பதால், கூடுதல் ரயில் தேவைப்படுகிறது.. அதனால், சென்னையில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற வழித்தடங்களில், முன்பதிவு இல்லாத அந்த்யோதயா ரயில்களை இயக்கினால், ஒரே நேரத்தில் அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதுடன் கட்டணமும் அரசு பஸ்சை விட குறைவு என்பதால் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் வேண்டுகோள்கள் கிளம்பியிருக்கின்றன.












Click it and Unblock the Notifications