“அதிமுகவை ஒன்றிணைக்க.. 10 நாட்கள் கெடுவா? தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க!” - செங்கோட்டையன் விளக்கம்
சென்னை: அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதிக்கப்பட்டது குறித்து, அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். 10 நாட்கள் கெடு விதித்ததாக ஊடகங்கள்தான் அதனை தவறாக புரிந்து கொண்டது என்று செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
"10 நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தி, ஒன்றரை மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்றுதான் சொன்னேன்" எனவும் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் மேலும் அவர் பேசியதாவது, "10 நாட்கள் கெடுவெல்லாம் கொடுக்கவில்லைங்க. நீங்க வீடியோதான் தப்பா போட்டிருக்கீங்க. 10 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை தொடர வேண்டும். அதிமுகவை ஒன்றிணைக்க ஒரு மாதமோ, ஒன்றரை மாதமோ எடுத்துக்கொள்ளலாம்" என்று கூறியிருந்தார். ராணுவ கட்டுப்பாட்டுள்ள இருந்த கட்சி இன்று பல சிதைவுகளுக்கு உள்ளாகியிருந்ததே என்று விமர்சனங்கள் எழுகிறதே? என்று செய்தியளார்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், சிதைவுகளுக்கு உள்ளாகியிருப்பதாக நீங்கள்தான் சொல்கிறீர்கள் என்று கூறியிருந்தார்.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த செப்.5ம் தேதி, ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், "தமிழகம் முழுவதும் போக வேண்டிய பேட்டி இது. ரொம்ப முக்கியமானது. முக்கியமான நேரம். அனைவரும் அமைதி காக்க வேண்டும். அதிமுகவை 1972ம் ஆண்டு எம்ஜிஆர் தொடங்கினார். அவர் தொடங்கிய காலத்தில் இருந்தே கட்சியின் கிளைச் செயலாளராக பணியாற்றினேன். 1975ல் கோவையில் நடந்த பொதுக்குழுவில் பொருளாளர் ஆக நியமித்தார்கள். 1977ல் சட்டசபை தேர்தலில் போட்டியிட எனக்கு எம்ஜிஆர் வாய்ப்பு கொடுத்தார். 1977ல் சத்தியமங்கலம் தொகுதியில் என்னை போட்டியிடுமாறு எம்ஜிஆர் அறிவுறுத்தினார்.
எம்ஜிஆருக்கு பிறகு கட்சியை வழிநடத்தும் திறமை ஜெயலலிதாவுக்கே உண்டு என்று தலைவர்களுடன் நானும் சென்று வேண்டுகோள் விடுத்தேன். தமிழகத்தில் ஜெயலலிதா சிறந்த ஆட்சியை தந்தார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆளுமை மிக்க முதல்வராக விளங்கினர். ஜெயலலிதா மறைவுக்கு பல்வேறு சோதனைகள் வரும் அன்றைக்கு எல்லோரும் ஒன்று சேர்ந்து கட்சியை பேணி காப்பதற்கு கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தோம்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தன. இரண்டு வாய்ப்புகள் கிடைத்த போது கூட இந்த இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதற்காக எனது பணிகளை மேற்கொண்டேன். இயக்கம் உடைந்து விடக்கூடாது என்பது தொண்டர்களின் நோக்கம் தான். அதிமுகவுக்காக பல தியாகங்களை செய்துள்ளேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நல்லாசி உடன் இந்த இயக்கம், மீண்டும் தமிழகத்தில் அமைய ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். 2016ம் ஆண்டிற்கு பிறகு தேர்தல் களம் எப்படி போராட்ட களமாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.
வெளியே சென்றவர்களை அரவணைத்தால் தான் தேர்தல் களத்தில் நாம் வெற்றி பெற முடியும். பாஜவின் மூத்த தலைவர்கள் அழைப்பின் பேரில் தான் டில்லி சென்றேன். அதிமுகவை ஒன்றிணைக்க எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் 6 பேருடன் சென்று இ.பி.எஸ்ஸை சந்தித்தேன். அவர் எங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. 2024ல் பா.ஜ., உடன் கூட்டணி தொடர்ந்திருந்தால் நாம் 30 இடங்களை வென்றிருப்போம். 6 முன்னாள் அமைச்சர்கள் நேரில் சென்று பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியும் எதிர்க்கட்சி தலைவர் அதனை ஏற்கவில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் சேர்ந்தால் தான் வெற்றி நிச்சயம்.
அதிமுகவில் இருந்து வெளியில் சென்றவர்களை ஒருங்கிணைப்பதற்கு நான் காலக்கெடு வைத்திருக்கிறேன். பத்து நாட்களுக்குள் ஒருங்கிணைக்கவில்லை என்றால் நாங்கள் முன் நின்று ஒருங்கிணைப்போம். வெளியே சென்றவர்கள் இணைக்கப்பட வேண்டும்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications