விஜயின் ‘மாஸ்டர்’ ப்ளான்..கொக்கி போட்டு காத்திருக்கும் தவெக! செங்கோட்டையன் தாவியது இதற்குத் தானா?
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது ஒரு புதிய உத்வேகத்தை உருவாக்கியிருப்பது தெளிவாக தெரிகிறது. அவர் தவெகவில் சேர்ந்த உடன், "மேலும் பல முன்னாள் அமைச்சர்களும் அனுபவமுள்ள தலைவர்களும் விரைவில் வந்து சேருவார்கள்" என அவர் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கூறியிருந்தார். இந்த ஒரு வாக்கியமே தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது. யார்? யார்? அந்த அதிமுக புள்ளிகள்? என்பது குறித்து தவெக - அதிமுக வட்டாரத்தில் கிடைத்த தகவல்களை பார்க்கலாம்..
"மேலும் பல முன்னாள் அமைச்சர்கள்" என செங்கோட்டையன் கூறிய இந்த வரவேற்பு வாக்கியம் யாரை நோக்கி இருந்தது என்பது பெரிய கேள்வியாகத்தான் இருந்தது. எடப்பாடி ஆதரவாளர்கள் இதை வெற்று வசனம் என தான் கூறினார்கள். ஆனால் அரசியல் வட்டாரங்களில் நிலவும் சில விஷயங்கள் அது உண்மை தான் என்கின்றன.
உண்மையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளில் சீட் கிடைக்காமல் மனக்கசப்பு கொண்டிருக்கும் தலைவர்களையே தவெக குறிவைக்கிறது. 2026 தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்படும் நேரத்தில், பல கட்சிகளிலும் அதிருப்தி அதிகரிக்கும் என்பதால், அதை பயன்படுத்திக்கொண்டு விஜய் தன் கட்சியை வலிமைப்படுத்த முயற்சிக்கிறார் என்கின்றனர்.

செங்கோட்டையன்
2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 191 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இந்த முறை பாஜக, பாமக, தேமுதிக போன்ற கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை எதிர்பார்க்கிறார்கள். அதனால் அதிமுக போட்டியிடும் தொகுதிகள் மேலும் குறையும். 160-170 தொகுதிகளுக்குள் அதிமுக போட்டியிட வேண்டிய சூழல் உருவாகலாம். இது நேரடியாக அவர்களுடைய மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மற்றும் முக்கிய நிர்வாகிகளின் வாய்ப்புகளை பாதிக்கும். இதே நேரத்தில், பாஜக சில முக்கிய தொகுதிகளை குறிவைத்து வருவதாக உள்ள தகவல்களும் அதிமுகவில் பரபரப்பை அதிகரிக்கச் செய்துள்ளன.
கூட்டணி பிரச்சனை
தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் கோவை வடக்கு தொகுதியை பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விரும்புகிறார். இதனால் அங்குள்ள அதிமுகவினரின் போட்டியிடும் வாய்ப்பு ஆபத்துக்குள்ளாகியுள்ளாது. பவானிசாகர் தொகுதியைச் சேர்ந்த பன்னாரியையும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் பாதிக்கக்கூடும். சென்னை வேளச்சேரி, தி.நகர் தொகுதிகளிலும் அதிமுக நிர்வாகிகளின் வாய்ப்புகள் பாஜக முன்னுரிமைக்காக குறையலாம். நெல்லை, தென்காசி, ராயபுரம் போன்ற தொகுதிகளிலும் அதே நிலை தான் இருக்கிறது.
2026 தேர்தல்
இப்படி வரும் 2026 தேர்தலில் நமக்கு கிடைக்கப் போவதில்லை என்பது தெரிந்தவர்களையே தவெக தற்போது குறிவைக்கிறது. செங்கோட்டையன் சேர்ந்தது இந்த வாய்ப்புக்காகத் தான் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அவர் கொங்கு மண்டலத்தில் வலுவான செல்வாக்கு கொண்டவர் என்பதால், அங்குள்ள அதிமுக-பாஜக அதிருப்தியாளர்களை தவெக எளிதில் அணுக முடியும். இதேபோல், திமுக-காங்கிரஸ் போன்ற கட்சிகளிலும்கூட வாய்ப்பு கிடைக்காது என்று எண்ணும் சிலரை தவெக மீண்டும் தன் பக்கம் இழுக்க நினைக்கிறது.
விஜய்
234 தொகுதிகளையும் நோக்கி நிற்கும் தவெகக்கான மிகப்பெரிய சவால் ஒவ்வொரு தொகுதியிலும் முகம் தெரிந்த வேட்பாளர்களை நிறுத்துவது. தற்போது ஒன்றிரண்டு பேரை தவிர யாருக்கும் யாரையும் தெரியாது. இதை சமாளிக்க குறைந்தது 80 தொகுதிகள் பிற கட்சிகளில் இருந்து வரும் தலைவர்களை நேரடியாக கொண்டுவரும் யுக்தியை விஜய் பயன்படுத்த நினைக்கிறார் கோவை மண்டலத்திலிருந்து இந்த வேட்பாளர் வேட்டையைத் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொங்கு மண்டலம்
செங்கோட்டையன் அதன் தளபதி போல செயல்படவிருக்கிறார். அவர் தவெகவுக்கு எதிர்காலத்தில் என்னவெல்லாம் சாதித்து தருவார் என்பதை காலம் தான் முடிவு செய்யும். ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது. தவெகவில் செங்கோட்டையனின் வரவு அதிமுகவுக்கு ஒரு குடைச்சலாக மாறத் தொடங்கிவிட்டது. விஜயின் இந்த யுக்தி கைகூடுமா? அதிருப்தியாளர்கள் தவெகவை நோக்கிச் செல்வார்களா? என்ற கேள்விக்கான விடைகள் அடுத்த சில வாரங்களிலேயே கிடைத்து விடும்.












Click it and Unblock the Notifications