அதிமுகவின் மூத்த நிர்வாகி.. எம்.ஜிஆர் காலத்து தலைவர்.. ஜெ.விசுவாசி.. யார் இந்த செங்கோட்டையன்?
சென்னை: அதிமுகவின் சீனியர் நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இன்று எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியதில் இருந்தே செல்வாக்காக வலம் வந்த செங்கோட்டையன் அதிமுகவில் கடந்து வந்த அரசியல் பாதையை பார்க்கலாம்.
அதிமுகவில் இருந்து விலகியவர்கள், நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று பசும்பொன்னில் டிடிவி தினகரன், ஓபன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்தார். இதையடுத்து, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

செங்கோட்டையன் நீக்கம்
அதிமுகவின் மிக மூத்த நிர்வாகியான செங்கோட்டையனின் அரசியல் பாதையை பார்க்கலாம். ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டையன். திமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய செங்கோட்டையன், 1972ஆம் ஆண்டு திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்ட பிறகு எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுகவில் இணைந்தார்.
எம்.ஜி.ஆரின் குட்புக்கில் இடம்பெற்ற செங்கோட்டையன், 1977ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். அதன்பிறகு, 1980-ஆம் ஆண்டு முதலே கோபிசெட்டிப் பாளையத்தில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றியை பெற்றுள்ளார்.
பல்வேறு துறைகளில் அமைச்சர் பதவி
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அதாவது, 1989 ஆம் ஆண்டில் அதிமுக ஜெ.அணி.. ஜா.அணி என்று இரண்டாக பிளவுபட்டது. அப்போது, ஜெயலலிதா அணியில் இருந்த செங்கோட்டையன் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1996 தேர்தலில் மட்டும் தோல்வியை சந்தித்திருக்கிறார் செங்கோட்டையன் தோல்வியை தழுவியுள்ளார். அதன்பிறகு அடுத்த அனைத்து தேர்தல்களிலும் செங்கோட்டையன் வெற்றியே பெற்றுள்ளார்.
கடந்த 1991 - 1996 ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், 2011 - 2016 ஆட்சிக் காலத்தில் விவசாயம், ஐடி, வருவாய் துறை என்று பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் செங்கோட்டையன் இருந்துள்ளார்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபர்
கடந்த 2016 - 2021 காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் இருந்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த செங்கோட்டையன், ஜெயலலிதாவின் பயணத் திட்டங்களை வகுத்து வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் உள்கட்சி மோதல் வெடித்தது.
எடப்பாடி எழுச்சி செங்கோட்டையன் வீழ்ச்சி
ஓ பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தர்மயுத்தம் தொடங்கினார். அப்போது முதல்வர் பொறுப்புகளில் பரீசிலிக்கப்பட்டவர்களின் பெயர்களில் செங்கோட்டையன் பெயரும் அடிபட்டது. எனினும், எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அதிமுகவில் செயல்பட்டார். எனினும், எடப்பாடி பழனிசாமி எழுச்சிக்கு பிறகு செங்கோட்டையன் செல்வாக்கு குறைந்தது.
இருந்த போதிலும் இருவருக்கும் இடையே மோதல் வெளிப்படையாக வெடிக்காத நிலையில் அண்மையில், பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நானே அதற்கான பணிகளை தொடங்குவேன் என்றும் பேசியிருந்தார். இதையடுத்து, செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டது. அப்போதே அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என பேசப்பட்டது. ஆனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் நேற்று பசும்பொன் தேவர் நிகழ்ச்சியில் டிடிவி, ஓ பிஎஸ்சுடன் சந்தித்திருந்ததை அடுத்து இன்று அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications