சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் பேச்சு- ஆ.ராசாவுக்கு எதிராக 5,000 புகார்கள்: எச்.ராஜா டார்கெட்!
காரைக்குடி: சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என மனுஸ்மிருதி சொல்வதை சுட்டிக்காட்டி பேசிய திமுக மூத்த தலைவரும் எம்.பி.யுமான ஆ.ராசாவின் பேச்சு இந்துக்களை புண்படுத்திவிட்டதாக தமிழகம் முழுவதும் 5,000 புகார்கள் போலீசில் கொடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
சென்னை நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்றார்.

பாஜக, காங். வலதுசாரிகள்
இதற்கு எதிராக பாஜக, காங்கிரஸ் வலதுசாரிகள் கடுமையாக கருத்துகளை தெரிவித்து வருகின்றன. ஆ.ராசா மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆ.ராசாவை திமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும்; ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும் என்பது வலதுசாரிகளின் கோரிக்கை.

என்ன தவறு? பெரியாரிஸ்டுகள்
ஆனால் திராவிடர் இயக்கம் காலந்தோறும் மனுஸ்மிருதியை மேற்கோள்காட்டி பேசி வரும் கருத்து இதுதான்; இன்றைக்கு ஏதோ ஆ.ராசா திடீரென பேசிவிட்டதாக சொல்வது மிரட்டல் வேலை; வலதுசாரிகள் கொந்தளிக்க வேண்டியது மனுஸ்மிருதிக்கு எதிராகத்தானே தவிர ஆ.ராசாவுக்கு எதிராக அல்ல என்பது பெரியாரிஸ்டுகளின் நிலைப்பாடு.

எச்.ராஜா கொந்தளிப்பு
இந்நிலையில் காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் எச்.ராசா கூறியதாவது: ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. உங்களுக்கு பாஜக, பிரதமர் மோடியை பிடிக்காமல் போனால் அவர்களைத்தான் விமர்சனம் செய்ய வேண்டும்; அதற்காக இந்துமதத்தை எதிர்ப்பது ஏன்?

5,000 புகார்கள் டார்கெட்
ஆ.ராசாவை திமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லை எனில் ஆ.ராசாவின் கருத்துகளை தாம் ஏற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும். இந்து மத உணர்வுள்ள ஒவ்வொரு இந்துவும் ஆ.ராசாவுக்கு எதிராக ஒவ்வொரு காவல்நிலையத்திலும் புகார் கொடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் குறைந்தபட்சம் 5,000 புகார்களாவது ஆ.ராசாவுக்கு எதிராக கொடுக்க வேண்டும். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.












Click it and Unblock the Notifications