குமரி அனந்தனுக்கு காமராசர் விருது.. தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் கெளரவம்
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு காமராஜர் விருது தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் விருது காமராசர் விருது வழங்கப்பட்டு வருகிறது.இந்த விருது பெரும் நபர்களுக்கு விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும் 8 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் தகுதி உரை ஆகியவை வழங்கப்பட்டு மரியாதை செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான காமராசர் விருது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கும், திருவள்ளுவர் விருது திருச்சியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரத்திற்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக அரசு சார்பில் விருது
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும், திருக்குறள் நெறி பரப்பியும் திருவள்ளுவர் சிலை நிறுவுதல் முதலான திருக்குறள் தொடர்பாக தொண்டு புரிந்துவருபவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டுவருகிறது.

திருவள்ளுவர் பெயரில் விருது
அந்த வகையில், பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவரும், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவரும், 2009-ம் ஆண்டு முன்னாள் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி தலைமையில் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு காரணமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராகவும் கன்னியாகுமரி மாவட்டம் காப்பியக் காட்டில் தொல்காப்பியர் சிலை நிறுவி திறக்கப்படுவதற்கு முதன்மையானவர்களுள் ஒருவராக இருந்து பணியாற்றிவரும் பெங்களூர் இந்தியன் தொலைபேசி தொழிலகத்தில் முதுநிலைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும் பெங்களூரில் வசிக்கும் திருச்சியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரத்துக்கு தமிழ்நாடு அரசு 2022-ம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருதினை வழங்குகிறது என கூறப்பட்டுள்ளது.

குமரி அனந்தனுக்கு விருது
அதேபோன்று, காமராஜருடன் இணைந்து பணியாற்றி தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்விகளை கேட்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தவரும், தமிழ் இலக்கியங்களில் புலமையும் பேச்சாற்றாலும் மிக்கவராகவும், தமிழ் இலக்கியவாதியாகவும் சிறந்த நூல்களைப் படைத்தவரும் பன்முகத் திறன் கொண்ட சொல்லின் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு அரசு 2021-ம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருதினை வழங்குகிறது.

பரிசு தொகை பதக்கம்
விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ஒரு லட்ச ரூபாயும், ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படுவார்கள் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
