பெரியார் பிறந்த தினத்தை டெல்லியில் சமூக நீதிநாளாக கொண்டாடுவோம்.. திமுக சீனியர்கள் வலியுறுத்தல்!
சென்னை: பெரியார் பிறந்த நாளான வரும் செப்டம்பர் 17-ந் தேதியன்று டெல்லியில் சமூக நீதி நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டாட வேண்டும் என்கிற குரல்கள் திமுக சீனியர் தலைவர்களால் வலியுறுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இம்மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் மீண்டும் மாறுதலுக்குட்படலாம் எனவும் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் 7 எம்.பிக்களை கொண்டிருக்கக் கூடிய தலைமை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய, மாநில கட்சிகள் அனைத்துக்குமே டெல்லியில் கட்சி அலுவலகம் கட்டுவதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தீன் தயால் உபாத்தியாயா மார்க் பகுதியில் தி.மு.க. கட்சி அலுவலகம் கட்ட 2013-ஆம் ஆண்டு இடம் ஒதுக்கப்பட்டது.
இதேபோல் அதிமுகவுக்கும் டெல்லியில் கட்சி அலுவலகம் கட்ட இடம் தரப்பட்டுள்ளது. டெல்லி திமுக அலுவலகமானது பாஜகவின் அலுவலகம் அருகே அமைந்துள்ளது.

டெல்லி திமுக அலுவலகம்
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நிலையில் முதல் முறையாக சென்ற மு.க.ஸ்டாலின், டெல்லி திமுக அலுவலக கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு சில ஆலோசனைகளை தெரிவித்திருந்தார். இந்த கட்டுமானப் பணிகளை சென்னை அண்ணாநகர் எம்.எல்.ஏ. மோகன் மகன் கார்த்தி மேற்பார்வை செய்து வருகிறார். டெல்லி திமுக அலுவலகத்துக்கு கலைஞர் அறிவாலயம் என பெயர் சூட்டப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்
இந்த டெல்லி திமுக கட்சி அலுவலகத்தை வரும் 17-ந்தேதி திறந்து வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. திமுக நடத்தும் முப்பெரும் விழாவை 15-ந்தேதி முடித்து விட்டு 16-ந்தேதி அவர் டெல்லி செல்வது என பயணத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த திட்டத்தை இந்த மாதத்தின் இறுதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி அலுவலக பணிகள் முழுமையாக இன்னும் முடிக்கப்படவில்லை என்பதால் திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறதாம்.

செப்.17 சமூக நீதிநாள்
இதனிடையே வரும் 17-ந்தேதி பெரியாரின் பிறந்த தினம் என்பதால், அந்த நாளை சமூக நீதி நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது தொடர்பான அறிவிப்புக்கு சட்டசபையில் அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்திருந்தன. அந்த நாளில் அவர் சென்னையில் இல்லாமல் டெல்லி செல்வது சரியாக இருக்காது என தி.க. தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியதால் டெல்லி பயண திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதும் பெரியாரின் பிறந்த தினத்தன்று டெல்லியில் கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்து சமூக நீதி நாளையும் அங்கே நடத்தி டெல்லிவாலாக்களுக்கு பெரியாரை நினைவுபடுத்துவோமே என்கிற குரல்களும் திமுக சீனியர்களிடம் இருந்து வந்துள்ளதாம்.

டெல்லியில் சமூக நீதிநாள்?
பெரியார் பிறந்த நாளில் டெல்லியில் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைத்தால் தேசிய அரசியலும் பரபரக்கும் என்கிற குரலையும் சீனியர்கள் வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஏற்கனவே டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் இத்தகைய ஒருங்கிணைப்புகளை மேற்கொண்டிருந்தனர். இதனால் திமுகவும் தம் பங்குக்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க அதுவும் பெரியார் பிறந்த நாளில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஆணித்தரமாக வலியுறுத்தப்பட்டு வருகிறதாம். இதனால் இம்மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணத்தில் மாறுதல் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றன அறிவாலய தகவல்கள்.












Click it and Unblock the Notifications