''ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு! நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற முடியாது''! -தராசு ஷியாம்
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.
செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர் இதனைக் கூறினார்.

சொத்து விவகாரம் வேறு, அரசியல் கட்சி விவகாரம் வேறு என்பதால் சொத்து வழக்குகளை போல் இந்த வழக்கில் தடை விதிக்க முடியாது என்றும் அதனால் தான் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகளில் எழும் பிரச்சனைகளுக்கு நீதிமன்றம் மூலம் நிவாரணம் தேடவே முடியாது என்பது தான் கடந்த கால வரலாறு என்றும் இதனை ஓ.பன்னீர்செல்வம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என தராசு ஷியாம் தெரிவித்துள்ளார். ஜானகி -ஜெயலலிதா விவகாரமாகட்டும், ஜெயலலிதா -திருநாவுக்கரசர் விவகாரமாகட்டும் எதிலுமே நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற இயலவில்லை என்றார்.

அரசியல் கட்சிகளில் எழும் உட்கட்சி பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்வதே சிறந்த புத்திசாலித்தனம் என்பதை சூசகமாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூறியிருக்கிறார் தராசு ஷியாம். அதைவிடுத்து மேல்முறையீடு செய்வோம் என இன்னும் காலத்தை தாழ்த்துவதாலும், பணத்தை செலவழித்து வழக்குகள் நடத்துவதாலும் ஓ.பன்னீர்செல்வத்தால் நிவாரணம் தேட முடியாது என்பதை சூசகமாக அறிவுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே மாநாடு மூலம் தனது பலத்தை நிரூபித்த எடப்பாடி பழனிசாமிக்கு இன்று வெளியாகியுள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் அவரது பலத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications