அதிமுக விக்கெட்டை தூக்கிய விஜய்.. தவெகவில் இணையும் செங்கோட்டையன்? கொங்கில் ஸ்ட்ராங்காகும் அஸ்திவாரம்
சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என பேசிய செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் அதிமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய சிக்கல் காத்திருக்கிறது. இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக கொங்கு மண்டலத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. விஜயகாந்த்-க்கு ஆதரவாக பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்தது போல, விஜய்க்கு ஆதரவாக செங்கோட்டையன் இருப்பார் என்ன பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் செங்கோட்டையன் இணைவு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அதிமுக அரசியலில் சமீபத்தில் நடந்த மிகப் பெரிய அதிர்ச்சி சம்பவங்களில் ஒன்று, மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதே. எடப்பாடியால் சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் நீக்கப்பட்ட நிலையில், அந்த பட்டியலில் இப்போது செங்கோட்டையனும் இணைந்துள்ளார்.
கட்சியில் பிளவை சரிசெய்ய வேண்டும், பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை ஏற்காத எடப்பாடி பழனிசாமி, இறுதியில் அவரது அடிப்படை உறுப்பினர் பதவியையே பறித்துவிட்டார்.

கேஏ செங்கோட்டையன்
இந்நிலையில், வரும் நவம்பர் 27-ந்தேதி, அதாவது இன்னும் சில நாட்களில், செங்கோட்டையன் நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருக்கிறார் என்ற தகவல்கள் பரவலாக பேசப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், 2026 சட்டசபை அரசியலில் பெரிய அதிர்வை உருவாக்கும் நகர்வாகக் கருதப்படுகிறது. ஈரோட்டைச் சேர்ந்த செங்கோட்டையன், வெறும் 25 வயதிலேயே எம்ஜிஆர் அரசியலுக்கு கொண்டு வந்தவர். எம்எல்ஏ பதவியையும் மிக இளம் வயதிலேயே பெற்றவர்.
அதிமுக பிரிவு
அதிமுக வரலாற்றில் ஒன்பது முறை எம்எல்ஏ ஆன ஒரே சிலரில் வரிசையில் இன்று வரை அவர் தனியாக செல்வாக்கோடு திகழ்கிறார். எம்ஜிஆரின் காலம், ஜெயலலிதா காலம் என இரு சகாப்தங்களில் கொங்கு மண்டலத்தில் குறிப்பாக ஈரோட்டில் மிகப் பெரும் செல்வாக்கோடு வலம் வந்தவர். எடப்பாடியை முதல்வராக ஆக்கிய பின்னணியில் செங்கோட்டையனின் பங்கும் குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கிடையே முதல்வர் வாய்ப்பு நெருங்கி வந்தது.
எடப்பாடி பழனிசாமி
அப்போதும் அதைத் துறந்து, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்து அவரை முதல்வராக்கியவர்களில் முக்கியமானவர் செங்கோட்டையன். கட்சி உடையக்கூடாது என்பது அவரது நிலைப்பாடு. எனினும், கடந்த ஒரு வருடமாக எடப்பாடியின் சில முடிவுகள் மீது அவர் மிகுந்த அதிருப்தியில் இருந்தார். 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமெனில், ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் ஏற்பட்ட பிளவைச் சரிசெய்ய வேண்டும் என்று செங்கோட்டையன் பல தடவை எடப்பாடியிடம் வலியுறுத்தினார்.
செங்கோட்டையன் தவெக
ஆனால் எடப்பாடி, "அவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை" என்பதில் உறுதியாய் இருந்த நிலையில், எதிர்வினையாக செங்கோட்டையன் பேட்டி கொடுக்க அவரது கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டன. சில வாரங்களுக்கு முன் அவரது அடிப்படை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கிடையே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுடன் தோன்றிய காட்சி, அதிமுக உட்கட்சி அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.
தமிழக வெற்றிக் கழகம்
பின்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர், "நான் கட்சிக்காக செய்த தியாகத்துக்குப் பிறகும், குறைந்தது ஒரு நோட்டீஸும் தரவில்லை" என்று கண்கலங்கியபடி பேசியது, அவரது ஆதரவாளர்களுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், செங்கோட்டையன் அடுத்த கட்டமாக எங்கு செல்கிறார் என்ற கேள்விக்கு நேரடி பதில் இன்னும் வராத நிலையில், "அவர் 27ம் தேதி விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம்" என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
கொங்கு மண்டல அரசியல்
விஜயின் தவெக 2026 தேர்தலுக்குள் பெரிய வலுவான கட்சியாக உருவெடுக்க முயலும் சூழலில், அதிமுகவின் இந்த மூத்த தலைவரின் வரவு அந்தக் கட்சிக்கு ஒரு பெரிய பிளஸ் பாயிண்டாகவே பார்க்கப்படுகிறது. அதிமுகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன் விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்த போது மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அதே போல விஜய்க்கு செங்கோட்டையன் இருப்பார் என சொல்லப்படுகிறது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications