செந்தில் பாலாஜி கைதும் "ஸ்க்ரீன் ஷாட்டும்.." ஆட்கொணர்வு மனு மீது அனல் பறந்த வாதம்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளார்கள் என அவருடைய மனைவி தரப்பு வழக்கறிஞர்கள் முன் வைத்துள்ளார்.
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த 13 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு அப்போது நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டதில் அவருக்கு இதயத்தில் 4 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. அது போல் அவருக்கு உடனடியாக பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க நீதிமன்ற உத்தரவுபடி அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அமலாக்கத் துறை அவரை காவலில் எடுத்ததை எதிர்த்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது கடந்த 22 ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது. அதில் செந்தில் பாலாஜியை எதற்காக கைது செய்கிறோம் என்றே சொல்லவில்லை என மேகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அமலாக்கத் துறை, செந்தில் பாலாஜி தரப்பு இடையே காரசாரமாக விவாதங்கள் நடந்த நிலையில் இந்த வழக்கு 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வு விசாரணையை தொடங்கியது. அப்போது செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ சில கருத்துகளை முன் வைத்திருந்தார்.
அதன்படி அவர் கூறியிருப்பதாவது: செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்தது நிரூபணமானது. சட்டவிரோத கைதை அமர்வு நீதிமன்றமும் மனதை செலுத்தி ஆராயாமல் இயந்திரத்தனமாக இருந்துள்ளது. காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை. கைதுக்கான மெமோவில் கையெழுத்திட செந்தில் பாலாஜி மறுத்தார் என்பதற்கான பதிவுகள் இல்லை.
இரவு 1.39 க்கு கைது செய்துவிட்டு அது குறித்த தகவல் காலை 8.12 க்குத்தான் தெரிவிக்கப்பட்டது. கைது தகவலை செந்தில் பாலாஜி சகோதரருக்கு சொன்னதாக கூறி ஒரு ஸ்க்ரீன் ஷாட்டை அமலாக்கத் துறை இணைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில் காலை 8.12 மணி என்றுதான் உள்ளது. மேலும் கைது தொடர்பான மெமோ, கைது குறித்த தகவல்கள் அப்போது தயாரிக்கப்பட்டவை அல்ல. காரணமே கூறாமல் ஒருவரை கைது செய்வது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என வாதம் செய்து வருகிறார்.
இதையடுத்து அமலாக்கத் துறை சார்பில் துஷார் மேத்தா தனது வாதங்களை முன் வைக்கையில், செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதம் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அவரை ஆதாரங்களின் அடிப்படையிலேயே கைது செய்துள்ளார்கள்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளார். நீதிமன்றக் காவல் ஆணை பிறப்பிக்கும் முன்பே ஆட்கொணர்வு மனு தாக்கலானதால் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை. கைதின் போது செந்தில் பாலாஜிக்கு சட்ட உதவிகள் கிடைத்தன. அப்போது மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ உடனிருந்தார். கைது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதற்கும், கைதுக்கான காரணங்களை தெரிவித்த ஆவணத்தை செந்தில் பாலாஜிப்பெற மறுத்ததற்கான ஆதாரங்களும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
செந்தில் பாலாஜியின் கைது குறித்து உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை என அவர் தரப்பு வாதம் செய்து வரும் நிலையில் அமலாக்கத் துறையோ செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்கு தெரிவித்துவிட்டதாக ஆதாரத்தை காண்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications