கால் மரத்து போகுது! ஓமந்தூராரில் செந்தில் பாலாஜிக்கு இதயவியல் சிகிச்சை.. ஆஞ்சியோவுக்கு பரிந்துரையா?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இதயவியல் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து இதயத்தில் அடைப்பு இருப்பது ஆஞ்சியோவில் கண்டுபிடிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவரது கைது சட்டவிரோதம் என அவரது மனைவி மேகலா தரப்பில் ஆட்கொணர்வு மனு போடப்பட்டது. ஆனால் இந்த மனுக்களின் விசாரணையின் போது செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சரியே என்றும் அவர் மீது தவறு இல்லாவிட்டால் அவர் நிரூபிக்கட்டும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் புழல் சிறையில் இருந்தபடியே தனது சிகிச்சையை தொடரலாம் என்றும் தேவைப்பட்டால் அரசு மருத்துவமனைகளுக்கு போலீஸார் அழைத்து வந்து சிகிச்சை கொடுக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அமலாக்கத் துறை பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தார். அவர்களது பதில் மனுவில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுத்தால் அவர் சாட்சிகளை கலைத்துவிடுவார். ஆதாரங்களை அழித்துவிடுவார் என பதில் அளித்தனர்.
இதற்கு செந்தில் பாலாஜி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் அமலாக்கத் துறை வசம் இருக்கும் போது எப்படி அழிக்க முடியும் என கேள்வி எழுப்பினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தனது தீர்ப்பில் செந்தில் பாலாஜி அமைச்சராகவே நீடிப்பதால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஆதாரங்களை அழித்து விடுவார். மேலும் அவருடைய தம்பி தலைமறைவாக இருந்து வருவதால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளிக்க முடியாது என தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பு செய்த மேல்முறையீட்டு மனு மீது வரும் 20ஆம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது. அது போல் அவரது நீதிமன்றக் காவல் வரும் 22 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் நேற்று மதிய உணவு உட்கொண்ட போதிலிருந்தே செந்தில் பாலாஜிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாம்.
இதையடுத்து அவரை பலத்த பாதுகாப்புடன் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவர் தொடர் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு இதயவியல் பிரிவுத் துறை தலைவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளிக்கிறார்கள். அவரது காலில் உள்ள நரம்பை எடுத்து அறுவை சிகிச்சை செய்ததால் அடிக்கடி கால் மரத்து போவதாக செந்தில் பாலாஜி கூறியதை அடுத்து சிகிச்சை நடைபெறுகிறது. தேவைப்பட்டால் அவருக்கு மீண்டும் ஒரு முறை ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுமென தெரிகிறது.












Click it and Unblock the Notifications