ஹார்டு டிஸ்க் மாயமா? மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி.. விளாசிய செந்தில் பாலாஜி
சென்னை: ஹார்டு டிஸ்க் திருட்டு நடந்ததாக கூறப்படுவது உண்மையெனில், அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மாநிலத்தில் நிலவும் மின்வெட்டு புகார்களில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில்தான் தற்போது ஹார்டு டிஸ்க் திருட்டு விவகாரம் பேசப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் மின் விநியோக மேலாண்மை குறித்து கடும் கேள்விகளை எழுப்பினார். அமைச்சரே தன்னை மிரட்டுவதாக கூறும் சூழலில் பொதுமக்களின் பாதுகாப்பு எப்படி உறுதி செய்யப்படும் என்றும், மின்வெட்டைத் தீர்க்க அரசின் ஆய்வுக் கூட்டங்கள் ஏன் நடத்தப்படவில்லை என்றும் அவர் வினவினார்.

சாமானிய மக்களின் நிலைமை
செந்தில் பாலாஜி கூறியதாவது:-தமிழ்நாட்டில் ஒரு அமைச்சரை மிரட்டும் அளவுக்கு ஒருத்தருக்கு துணிச்சல் இருக்கின்றது என்றால், சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு இருக்கிறது என நீங்கள் நினைத்து பாருங்கள். ஒரு அமைச்சரையே யாரோ ஒருவர் மிரட்டி பார்க்கிறார்கள் என்றால், சாமானிய மக்களின் நிலைமை என்ன என்று நீங்களே நினைத்து பாருங்கள்.
தொடர்ந்து மின் வெட்டு காரணமாக மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த அரசு பொறுப்பேற்று ஏறத்தாழ ஒரு மாதம் ஆகிவிட்டது. இதுவரை இந்த மின் துறை அமைச்சர், மின் விநியோகத்திற்கு என தனியாக ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தி இருக்கிறாரா?.. நம்ம கையில் எவ்வளவு இருக்கு, இந்த கோடைக்காலத்திற்கு எவ்வளவு மின் தேவை வேண்டும் என்பெதெல்லாம் ஆய்வு நடத்தினால் தானே தெரியும். முறையான ஆய்வுக் கூட்டத்தினை நடத்தி மின்வெட்டுக்கான தீர்வினை காண வேண்டும்.
ஹார்டு டிஸ்க் திருட்டு என சொல்கிறார்கள்
மின் துறை சார்ந்த டெண்டர்களுக்காக 3 குழுக்கள் இருக்கின்றன. இப்படி இருக்கும் போது மின்சாரத் துறை சார்ந்த டெண்டர்களில் முறைகேடு செய்ய முடியாது. உயர்மட்ட அதிகாரிகளை மட்டுமே சந்திக்கும் அமைச்சர், அடுத்த கட்ட ஊழியர்களை சந்திப்பதில்லை. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் துறை குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளாமல் ஆராயாமல் எதேதோ பேசுகின்றார்கள்.
இப்போது அமைச்சராக பதவியேற்றதும் மின் துறையில் ஒன்றரை லட்சம் கோடி கடன் இருந்தது என சொல்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தபோதே மின்வாரியம் ஒன்றரை லட்சம் கோடி கடனில் இருந்தது. இப்போது ஹார்டு டிஸ்க் திருட்டு என சொல்கிறார்கள். அப்படி ஹார்டு டிஸ்க் திருட்டு உண்மை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?
இது ரீல்ஸ் ஆட்சி
எந்த துறை, எதில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்டது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?.. மின்வெட்டு புகாரை திசை திருப்பவே அவர்கள் இப்போது ஹார்டு டிஸ்க் திருட்டு என கூறுகிறார்கள். இது ரீல்ஸ் ஆட்சி என்பதை இப்போது மக்களே புரிந்துகொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications