அமலாக்கத் துறை கேட்ட முக்கிய கேள்வி.. அப்படியா எனக்கு ஞாபகம் இல்லையேனு பதில் அளித்த செந்தில் பாலாஜி
சென்னை: அமலாக்கத் துறை அதிகாரிகளின் சரமாரியான பல கேள்விகளுக்கு தெரியாது, ஞாபகம் இல்லை என்ற பதிலை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது வரும் 12 ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் உள்ளார். கடந்த 7ஆம் தேதியிலிருந்து அவர் அமலாக்கத் துறை காவலில் இருந்து வருகிறார்.

8ஆம் தேதி காலை முதலே அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவ்வப்போது ஓய்வு கொடுத்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜியிடம் கேட்பதற்காக 400-க்கும் மேற்பட்ட கேள்விகளை தயார் செய்துள்ளார்.
இவை அனைத்து வெள்ளை பேப்பரில் டைப் செய்யப்பட்டு அதற்கு செந்தில் பாலாஜி எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத் துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் சுழற்சி முறையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். பண பரிவர்த்தனை தொடர்பான வங்கி கணக்கு விவரங்களை வைத்தும் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இதுவரை 250 கேள்விகளுக்கு செந்தில் பாலாஜி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அவருக்கு சரியான நேரத்திற்கு சாப்பாடும் ஓய்வும் கொடுக்கப்படுகிறது. அது போல் கீழ் தளத்தில் மருத்துவர்கள் குழுவினர் உள்ளனர். செந்தில் பாலாஜி காலையில் எழுந்து நடைபயிற்சி செல்லவும் அனுமதிக்கப்படுகிறது.
அதில் முக்கிய கேள்விகளான நீங்கள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1.62 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு செந்தில் பாலாஜி, கணேஷ்குமார் மட்டும் ஒரு முறை என்னை நேரில் சந்தித்து மனு அளித்தார். மற்ற இருவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றார்.
இவர்கள் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் 1.34 கோடி ரூபாய் மனைவி மேகலா வங்கிக் கணக்கில் 29.55 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. இது உங்கள் மனைவிக்கு தெரியுமா என கேட்டனர். அதற்கு செந்தில் பாலாஜி, இந்த கேள்விக்கு நான் ஏற்கெனவே பதில் அளித்துவிட்டேன். கரூர் ராம் நகரில் உங்கள் சகோதரர் அசோக்குமார், மனைவி நிர்மலா பெயரில் பங்களா கட்டி வருகிறார்.
அவர் என்ன வேலை செய்துக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு நன்கு தெரிந்த அனுராதா என்பவர் உங்கள் சகோதரரின் மாமியார் பெயரு்கு விற்றுள்ளார். 25 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் வெறும் 10 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளது. ஆனால் உங்கள் சகோதரரின் மாமியார் பழைய நகைகளை விற்று அந்த பணத்தில் நிலம் வாங்கியதாக கணக்கு காட்டியுள்ளார்.
அந்த நிலத்தை பினாமிகள் பெயரில் நீங்கள் தான் வாங்கியுள்ளீர்கள் என அதிகாரிகள் கேட்டனர். அதற்கு செந்தில் பாலாஜி இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நிலம் வாங்கியது தொடர்பாக அசோக்குமார் என்னிடம் தெரிவித்ததாக கூட ஞாபகம் இல்லை என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இப்படியாக பல்வேறு கேள்விகளுக்கு அவரிடம் இருந்து தெரியாது, ஞாபகம் இல்லை என்றே பதில்கள் வந்தன. செந்தில் பாலாஜி தரும் பதில்கள் அனைத்தையும் அமலாக்கத் துறையினர் வீடியோவாகவும் பதிவு செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications