செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு.. விசாரணை நிறைவு.. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது ஐகோர்ட்!
சென்னை: செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரனை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணை இன்று முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த 13 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு பைபாஸ் சர்ஜரி சிகிச்சை தேவைப்பட்டதால் நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படது.
தற்போது செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, செந்தில் பாலாஜி சட்ட விரோத காவலில் இருப்பதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிடக்கோரியும் அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார். கடந்த ஜூன் 22ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்த போது "என் கணவரை சட்டவிரோதமாக கைது செய்து இருப்பதாகவும் அவரின் கைதுக்கான காரணத்தை சொல்லவில்லை' என்றும் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் நிஷாபானு மற்றும் பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் இருந்து வழக்கறிஞரும் திமுக எம்.பியுமான என்.ஆர்.இளங்கோ வாதங்களை முன் வைத்தார். அமலாக்கத்துறை தரப்பில் துஷார் மேத்தா காணொலி வாயிலாக ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். இந்த வழக்கின் வாதங்கள் காரசாரமாக நடைபெற்ற நிலையில், வழக்கின் விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் , அதிகாரிகளை மிரட்டும் தொனியில் செந்தில் பாலாஜி நடந்து கொண்டதாகவும் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி கைது செய்ததாகவும் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால்தான் அவரை கைது செய்ததாகவும் கைதின் போது சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அவரை விசாரிக்கவில்லை எனவும் எதிர்காலத்தில் விசாரிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த கூடுதல் மனுவில் அமலாக்கத்துறை குறிப்பில் ஜூன் 13 ஆம் தேதி இரவு 11 மணிக்கு சோதனை முடிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் நள்ளிரவு 1.39 மணிக்குதான் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டு உள்ளனர். இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை என்று கூறியுள்ளார். எனவே தனது கணவர் செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை தொடங்கியதும் 20 நிமிடங்கள் வாதங்கள் முன்வைக்க செந்தில்பாலாஜி தரப்புக்கு வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோவுக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர். அதன்படி என்.ஆர் இளங்கோ வாதங்களை முன்வைத்தார்.
பின்னர் அமலாக்கத்துறை தரப்பில் துஷார் மேத்தா வாதிட்டார். அவர் வைத்த வாதத்தில், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி, ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் கைதுக்குப் பின் அதற்கான காரணங்களை தெரிவிக்கலாம் எனவும் கூறினார். கைது செய்யும் போது அதற்கான காரணங்களை கூற வேண்டும் என சட்டத்தில் கூறவில்லை.
உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் பெற்றார் என்பதற்கான ஆதாரம் உள்ளது. அதன் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை. நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்படவில்லை. எனவே ஆட்கொணர்வு வழக்கு தொடர முடியாது. நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பிக்கும் முன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதால், சட்டவிரோத கைது என கூற முடியாது என்று துஷார் மேத்தா வாதிட்டார்.
செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். நாளை இரு தரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications