டக்னு "வேலைய" ஆரம்பிச்சிட்டாங்க.. மீண்டும் "லாக்" ஆன செந்தில் பாலாஜி..தொடரும் சிறைக்காவல்..என்னாச்சு
சென்னை: சிறைக்காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மீண்டும் சிறைக்காவல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.. சிறப்பு நீதிமன்றத்தில் நேரிலேயே ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றம் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறை அதிகாரிகள், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.

விசாரணை: செந்தில் பாலாஜியிடம் 5 நாட்கள் விசாரணை நடத்தியபிறகு, மறுபடியும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 5 நாள் கஸ்டடியில் இருக்கும்போது, செந்தில் பாலாஜியிடம் தினமும் நடத்திய விசாரணையின் தகவல்கள் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.. அவை ஸ்க்ரிப்ட்டாகவும் எழுதப்பட்டுள்ளது..
இதனை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்களாம் அமலாக்கத்துறையினர்.. செந்தில்பாலாஜி, அவரது தம்பி மற்றும் பினாமிகளை குறிவைத்து ரெய்டில் இறங்குவதற்கு முன்பே பல ஆதாரங்களை சேகரித்ததாகவும், ரெய்டிலும் எதிர்பாராத ஆதார ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்பட்டன.
ஒப்பீடுகள்: அதுமட்டுமல்ல, இவைகள் இரண்டையும், கஸ்டடி விசாரணையில் செந்தில் பாலாஜி கூறியவைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பணிகள் டெல்லியில் நடந்து வருகின்றன...
இதனை வைத்து ஒரு ரிப்போர்ட் தயாரிக்கப்படுமாம். அந்த ரிப்போர்ட்டை வைத்து, கூடுதலாக மற்றொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் அமலாக்கத்துறையினர் திட்டமிடுவதாகவும் தகவல் கிடைக்கிறது. மேலும், வழக்கு விசாரணையின் போது, இந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில், அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்படும் என்றும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.
ஸ்பெஷல் கோர்ட்: இந்நிலையில், கடந்த 25ம் தேதியுடன், செந்தில்பாலாஜிக்கு சிறைக்காவல் முடிவடைந்தது.. இதையடுத்து, செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை, அமைச்சர் செந்தில் பாலாஜி, சிறையிலிருந்து வீடியோ காணொலிகாட்சி மூலம் எல்.எல்.ஏ., எம்.பி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நேரில் ஆஜர்: அப்போது, சிறப்பு நிதிமன்ற பொறுப்பு நீதிபதி சிவகுமார், அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை, 28ம் தேதி வரை அதாவது இன்றைய தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தார். அத்துடன் இன்றைய தினத்தில் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தும்படி சிறைத்துறையினருக்கும் உத்தரவிட்டிருந்தார். அதன்படியே, சிறைக்காவல் நீட்டிப்பு முடிவடையும்நிலையில், செந்தில்பாலாஜியை இன்று நேரில் ஆஜர்படுத்தினார்கள்.
செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்ஆர் இளங்கோவுக்கும், அமலாக்கத்துறை வழக்கறிஞருக்கும் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதி வழங்கப்பட்டது. செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை... செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி உத்தரவிட்டார். அவரிடம் குற்றப்பத்திரிக்கை நகலும் அளிக்கப்பட்டது.

ஜாமீன்: அப்போது ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்பதால், அதற்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தினார். அமலாக்கத்துறை தாக்கல் செய்த 150 பக்க குற்றபத்திரிகை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் வழங்கப்பட்டது.
அடுத்தமுறை காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜர்படுத்த தேவையில்லை என்றும், காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தினால் போதுமென சிறைத் துறைக்கு நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார்.
முதன்மை நீதிமன்றம்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியது.. இதையடுத்து, குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டதை ஆராய்ந்து ஜாமீன் கோருவதற்கான வேலையை செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் தரப்பு ஆரம்பித்துள்ளது..
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு, அந்த மனு விரைவில் தாக்கல் செய்யப்படலாம் என்கிறார்கள். அந்தவகையில், விரைவில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications