அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதம் ஏற்பு- ஆளுநர் மாளிகை அறிவிப்பு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஆளுநர் மாளிகை ஏற்றதாக அறிவித்துள்ளது.
அமலாக்கத் துறை சார்பில் கடந்த ஆண்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. இந்த நிலையில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி லஞ்சம் பெற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய சகோதரர் அசோக் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத் துறை கடந்த ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.
இதையடுத்து இந்த பரிசோதனை அடுத்த நாள் வரை நீடித்தது. ஜூன் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு அடிக்கடி உடல் நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக 3000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை டிரங்க் பெட்டியில் வைத்து அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார்.
அவருடைய பொறுப்பு வகித்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி பல முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தார்.
ஆனால் அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வந்தது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்திலும் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த ஜனவரி 30ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடை நிலை ஊழியர் ஒருவர் குற்ற வழக்கில் 48 மணி நேரம் சிறையில் இருந்தாலே உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்.
ஆனால் குற்ற வழக்கில் செந்தில் பாலாஜி 243 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். எந்த அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிக்கிறார்? இதன் மூலம் தமிழக அரசு மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் இந்த ஜாமீன் மனு மீது நாளை விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில் புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை நேற்றைய தினம் ராஜினாமா செய்தார். அந்த கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். தமிழக மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பை கொடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. சட்டரீதியாக என் வழக்குகளை சந்தித்துவிட்டு நான் வெளியே வருவேன் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறி முதலமைச்சருக்கு செந்தில் பாலாஜி நேற்று கடிதம் அனுப்பியிருந்தார். அதன்படி செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications