சர்வீஸ் சாலை இனி கட்டாயம்! மால்கள், கல்யாண மண்டபங்களுக்கு புதிய கட்டுப்பாடு.. மக்களுக்கு பல பலன்கள்
சென்னை: நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைந்த மால்கள் மற்றும் திருமண மண்டபங்களால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, பள்ளிகளுக்கு போல் சர்வீஸ் சாலை கட்டுப்பாடு கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. சர்வீஸ் சாலை கட்டுப்பாடு என்றால் என்ன? தற்போது திருமண மண்டபங்கள், மால்களிலும் அமல்படுத்த நினைப்பதன் அவசியம் என்ன? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
ஒரு பெரிய சாலை அல்லது ஹைவேஸின் ஓரத்தில், அதிலிருந்து சிறிது விலகி இணையாக அமைக்கப்படும் ஒரு சின்ன சாலையை நாம் சர்வீஸ் ரோடு என்போம்..

சர்வீஸ் ரோடு
மெயின் ரோட்டிலிருந்து செல்லும் வாகன போக்குவரத்தை தடுக்காமல், அருகிலுள்ள ஸ்கூல், கடைகள், குடியிருப்பு பகுதிகள் போன்ற இடங்களுக்கு வந்து செல்லும் வாகனங்கள் பாதுகாப்பாக சென்று வர இந்த சர்வீஸ் ரோடு உதவுகிறது.. பெரும்பாலும் இந்த சர்வீஸ் ரோடுகள் குறுகலாகவே இருக்கும்..
ஆனாலும் வண்டிகள் ஒதுங்கி நிற்க, முக்கிய சாலையில் இருந்து விலகி செல்ல, அல்லது மெதுவாக செல்வதற்கும் ரொம்பவே பயன்படும்.
"சர்வீஸ் சாலை கட்டுப்பாடு"
"சர்வீஸ் சாலை கட்டுப்பாடு" என்றால், நெடுஞ்சாலையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் உள்ள இடங்களில், அந்த நெடுஞ்சாலைக்கு இணையாக, குறைந்தது 7 மீட்டர் அதாவது சுமார் 22 அடி அகலத்தில் ஒரு தனி சாலை அமைப்பார்கள்..
ஏனென்றால், ஹைவேஸில் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல், அந்த கட்டிடங்களுக்கு வரும் வாகனங்கள் பாதுகாப்பாக நின்று செல்ல வசதியாக இருக்கும் என்பதால்தான்... இந்த சர்வீஸ் சாலை பெரும்பாலும் அந்த கட்டிடத்தை அமைக்கும் நிறுவனமே, தனது சொந்த செலவில், நிலம் ஒதுக்கி அமைக்க வேண்டும்.
அந்தவகையில், தியேட்டர்களுடன் கூடிய மால்கள், திருமண மண்டபங்களுக்கும் சர்வீஸ் சாலை கட்டுப்பாடு கொண்டு வர அரசு திட்டமிட்டு வருகிறதாம்.
7 மீட்டர் அகல சர்வீஸ் ரோடு
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, காலையிலும், மாலையிலும் பள்ளி வாகனங்களால் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது.. சில சமயம், பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலையும் உருவாகிறது.
இதற்கு தீர்வாகவே, பள்ளி வளாகங்களுக்கு அருகே 7 மீட்டர் அகல சர்வீஸ் சாலை அமைப்பது கட்டாயம் என்ற உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது. பள்ளி வாகனங்கள் அந்த சர்வீஸ் சாலையில் நின்று மாணவர்களை ஏற்றி இறக்குவதால், நெடுஞ்சாலையில் டிராபிக் நெரிசல் ஏற்படுவதில்லை.. இந்த சாலையை அந்தந்த பள்ளி நிர்வாகமே, தங்கள் சொந்த செலவில் அமைக்க வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது.
மால்கள், கல்யாண மண்டபங்கள்
இந்த நடைமுறை இப்போது நல்ல பலன் கொடுத்து வருகிறது.. எனவேதான், பள்ளிகள் மட்டுமின்றி, இனிமேல் பெரிய பெரிய கல்யாண மண்டபங்கள், தியேட்டர்களுடன் கூடிய மால்களிலும் இதே நடைமுறையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாம்,. ஏனென்றால் கல்யாண மண்டபங்கள், மால்களிலும்கூட, இப்படியான நெரிசல்கள் ஏற்பட்டுவிடுகின்றன.
சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில், நெடுஞ்சாலைகளை ஒட்டி பெரிய மால்களும், தியேட்டர்களுடன் கூடிய மால்களும், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களும், பிரம்மாண்டமான கல்யாண மண்டபங்களும் அதிகமாக கட்டப்பட்டு வருகின்றன... இங்கெல்லாம் ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் உள்ளே செல்வதும், வெளியேறுவதும் அரங்கேறுகின்றன.. இதனால், அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்... இதனால் விபத்துகளும் சிலசமயம் நடந்துவிடுகின்றன.
தமிழக அரசு நம்பிக்கை
அதனால்தான், பள்ளிகளை போலவே, மால்கள், கல்யாண மண்டபங்களுக்கும் சர்வீஸ் சாலை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இதனால் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் இதுகுறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது..
இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீராக நடைபெறும் என்றும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கும் என்றும் வல்லுநர்களும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "பள்ளிகளுக்குப் பிறகு, மால்கள், திருமண மண்டபங்கள் இருக்கும் பகுதிகளிலும் சர்வீஸ் சாலை அமைப்பது அவசியம் என்ற கருத்து அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இதற்கான புதிய உத்தரவில், மால்கள் மற்றும் மண்டபங்களை சேர்ப்பது குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.
இந்த முடிவு நடைமுறைக்கு வந்தால், நகரங்களின் முக்கிய சாலைகளில் நீண்டகாலமாக இருந்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வாக அமையும் என்று பொதுமக்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்..!!!












Click it and Unblock the Notifications