Ramadoss: "எங்களுக்கு யார் ஓட்டு போடுவா?இது சரிபட்டு வராதும்மா!" சசிகலாவுக்கு நோ சொன்ன ராமதாஸ்!
சென்னை: தமிழக அரசியலில் 'தாய் உள்ளத்தோடு அனைவரையும் இணைப்பேன்' என்ற முழக்கத்துடன் மீண்டும் களம் காண முயலும் சசிகலாவிற்கு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பிலிருந்து பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவின் பிளவுகளைச் சாதகமாக்கி, பிரிந்து கிடக்கும் அணிகளை ஒன்றிணைக்கப் போவதாகக் கூறி வரும் சசிகலாவின் திட்டத்திற்குப் பாமக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்களைப் பயன்படுத்தி, அக்கட்சியின் முன்னாள் நிர்வாகிகளையும், பழைய கூட்டணிக் கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வர சசிகலா திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் அன்புமணியால் அதிமுகவுக்கும் செல்ல முடியாமல், விசிக எதிர்ப்பால் திமுக கூட்டணிக்கும் செல்ல முடியாமல் ராமதாஸ் தரப்பு தவித்து வந்தது. இதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள சசிகலா நினைத்ததாக சொல்லப்படுகிறது.
ராமதாஸுடன் சந்தித்து பேச பாமகவின் முக்கிய நிர்வாகிகளிடம் சசிகலா தரப்பு ரகசியப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது. பழைய நட்பு மற்றும் அரசியல் கணக்குகளை முன்வைத்து இந்தச் சந்திப்பிற்கு நேரம் ஒதுக்குமாறு கோரப்பட்டது.
கடந்த அப்போது ராமதாஸுடனான சந்திப்பில் சசிகலா, உங்களுக்கு அன்புமணியை வீழ்த்த வேண்டும். எனக்கு பழனிசாமியை தோற்கடிக்க வேண்டும். எனவே இருவரும் கூட்டணி அமைத்து சிறிய கட்சிகளை அணி திரட்டுவோம் என கூறினாராம்.
அதற்கு ராமதாஸோ, "பாமக பலமாக உள்ள வடக்கு, மேற்கு மாவட்டங்களில் உங்களுக்கு ஆதரவு இல்லை. உங்களுக்கு செல்வாக்குள்ள தென் மாவட்டங்களில் எங்களுக்கு ஆதரவு இல்லை. எனவே இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் தென் மாவட்டங்களில் எங்களுக்கு ஓட்டு கிடைக்காது. எனவே இந்த கூட்டணி சரிவருமா" என யோசித்து சொல்வதாக தெரிவித்தாராம்.
இந்த நிலையில் ராமதாஸ், சசிகலா தரப்பிடம் இந்த கூட்டணி சரிபட்டு வராது என கூறிவிட்டாராம். சசிகலாவின் அரசியல் பயணம் எவ்விதத் தெளிவான இலக்கும் இன்றி இருப்பதாலும், தற்போதுள்ள அரசியல் சூழலில் அவரோடு கைகோர்ப்பது கட்சிக்கு எவ்விதப் பலனையும் தராது என்பதாலும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் அதிமுகவோடு பாமக நெருக்கமாக இருந்தபோதும், சசிகலா குடும்பத்தினரின் தலையீடுகள் குறித்து ராமதாஸ் பலமுறை விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மேலும், தற்போது பாமக தனது அரசியல் பாதையைத் தனித்துவமாக வகுத்து வரும் நிலையில், சசிகலா போன்றவர்களுடன் இணைவது கட்சியின் வாக்கு வங்கியையோ அல்லது எதிர்காலத் திட்டங்களையோ பாதிக்கக்கூடும் என அவர் கருதுகிறாராம்.
சசிகலாவின் அழைப்பை ராமதாஸ் நிராகரித்திருப்பது, சசிகலாவிற்கு மட்டுமல்லாது அதிமுகவின் மற்ற அணிகளுக்கும் ஒரு செய்தியாகப் பார்க்கப்படுகிறது. பாமகவைப் பொறுத்தவரை கொள்கை ரீதியான மற்றும் வலுவான தலைமை கொண்ட கட்சிகளுடனேயே கூட்டணி அல்லது பேச்சுவார்த்தை என்பதில் உறுதியாக இருக்கிறது.
சசிகலாவால் மீண்டும் அதிமுகவை ஒருங்கிணைக்க முடியாது என்ற கணிப்பும் ராமதாஸின் இந்த அதிரடி முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சசிகலாவின் "ஒன்றிணைப்பு" முயற்சிக்குத் தொடக்கத்திலேயே முட்டுக்கட்டை போட்டுள்ள ராமதாஸின் இந்த நகர்வு, தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. சசிகலாவின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் இது எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications