சென்னை அண்ணா பல்கலை.யில் மாணவி பலாத்காரம்! இதுதான் சட்டம் ஒழுங்கு லட்சணமா? அட்டாக் மோடில் அண்ணாமலை!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மொக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
சென்னை நகரின் மையப் பகுதியான கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

அவர் அதே கல்லூரியில் மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் மறைவான இடத்தில் அந்த மாணவியும் அவரது காதலனும் பேசிக் கொண்டிருந்தனர்.
அண்ணாமலை பல்கலைக் கழகம்:
அப்போது அங்கு வந்த இரண்டு பேர் மாணவனை கடுமையாக தாக்கி விட்டு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதனை வீடியோவாக எடுத்து வைத்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை:
சம்பவம் நடந்த அன்று பல்கலைக்கழகத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் ஒருவரை பிடித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் கல்லூரி மாணவர்களை இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா அல்லது வெளி ஆட்கள் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை நகரின் மையப்பகுதியில் பாதுகாப்பு நிறைந்த இடத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் மேலும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

அண்ணாமலை:
இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டது. தினமும் படுகொலைச் சம்பவங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பொதுமக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத இருண்ட காலத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில் தமிழகம் தற்போது இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.
காவல்துறை:
குறிப்பாக, குற்றவாளிகள் திமுகவினர் என்றால், அவர்கள் மீதான நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது.
மாநிலத் தலை நகரத்தின் மையப் பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
முதல்வர் ஸ்டாலின்:
உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகர காவல்துறையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரும், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications